சனி, 10 ஜூலை, 2010

அந்தி ஓவியம்!கொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய்,
வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால்
அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும்
படிக்கு நடந்ததென் ன? (1)

நடந்து கடந்த நலிவால் கதிரும்
கிடந்து சிவந்து கிழிய –படர்குருதி
அம்மா!அவ் அந்தியென்பர்! அன்(று)!அச் சிவப்பழகு
செம்மாந்த வானின் சிரிப்பு! (2)

சிரிக்கும் சிலையின் செழிப்பொடு செம்மண்
பரப்பின் நிறமும் படர்வான் -விரிப்பழகை
அன்ன மெதுநடையார் அங்கை மருதாணி
என்னல்செவ் வந்திக் கெழில்! (3)

எழுமந்திப் போழ்தின் எழில்சொல்ல ஒல்லா(து)
அழுமென்றன் உள்ளம் அடடா! –தொழுகின்றேன்
விண்ணில் நிறங்களின் வெற்றித் திருவிழா
கண்முன் தெரிகின்றக் கால்! (4)

காலைக் கதிர்வளர்ந்து மாலை தனில்முதிரச்
சோலைப் பழச்சிவப்பாய்த் தோற்றமுறும் –ஆலைபடு
செங்கரும்பின் தீஞ்சாறாய்ச் சிந்தும் நிறப்பொழிவால்
அங்கரும்பும் அந்தி அழகு! (5)

அன்றொருத்தி பிய்த்தெறிந்த அம்கொங்கை யால்மதுரை
நின்றெரிந்த காட்சியினை நேரொக்கும் –என்றென்றும்
கீழ்வானம் பிய்த்தெறியும் செங்கதிரால் மேல்வானம்
பாழ்பட்டு வெந்தழிதல் பார்! (6)

பாராண்ட பத்துத் தலைவேந்தோ கிழ்வானம்?
சீரான் இராமன்போல் செங்கதிரைப் –போராடி
மீட்ட உடன்தீயின் மேலேற்றிப் பார்க்கிறதே!
மீட்டுவந்த மேல்வான மே! (7)

மேனி கருகாமல் மேலெழுந்த சீதையைப்போல்
வானில் கதிர்காலை வந்தொளிரும் –கானில்
கடுந்தீயை மூட்டுகின்ற காற்றெனவே மேகம்
தொடுமந்தித் தோற்றத்தில் தோய்ந்து! (8)

தோயும் குருதியுடன் தொப்பென்று வீழ்கின்ற
காயும் கதிரவனைக் கண்டவுடன் –தாயும்
கழுகதன் குஞ்சுமெனத் திங்களும் மீனும்
எழுகின்ற அந்தி எழில்! (9)

எழிலந்தி வானத்தில் ஈழத்தைக் காய்ச்சி
வழிந்தோட விட்ட வகையாய்ச் –சுழித்தோடும்
தேன்பாகின் ஆறாய்த் தெறிக்கும் நிறம்தேவர்
கோன்பாருக்(கு) ஈந்த கொடை! (10)

அகரம் அமுதன்

6 கருத்துகள்:

 1. அந்தி சிவப்பழகை அற்புதமாய்ச் சொல்லிவிட்டீர்
  செந்தமிழின் சொல்லழகோ சித்திரமோ - செந்தேனாய்ச்
  சிந்துகின்ற வானோ! சிறப்புந்தன் சிந்தனையில்
  வந்துதித்த பாவென்பேன் யான்.

  பதிலளிநீக்கு
 2. காதில் குரும்பேத்த வில்லியும்,
  அரும் சிரசில் சீ பார்த்த சாத்தனும்,
  ஈங்கில்லை கண்டீர்,இனி(ய) மரபினை
  உரசுவேன் நானும் உற்சாகமாய்!!

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக உரசுங்கள் இராமமூர்த்தி அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. நண்ப,

  அருமையான பாக்கள்... சிலப்பதிகாரம், இராமாயணம், விழும் புலாற்றுண்டும் எழும் கழுகுக் குடும்பமும் என அந்திச் சிவப்பு எதையெதையெல்லாம் நினைவூட்டுகிறது தங்களுக்கு என்பதை காண்கையில் மிக வியக்கிறேன்...

  தங்களைப் போன்றோர் இருக்கையில், யானும் புலவனென எண்ணி ஒரு வலையைத் துவங்கிவிட்டதை என் சொல்ல! முடிந்தால் தாங்களும் தங்கள் தோழர்களும் இவ்வலையில் பங்கு கொள்ளுங்கள், இன்றேல், என்னைத் தங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.. :-)

  அன்புடன்,
  விஜய் :-)

  பதிலளிநீக்கு
 5. வருக விஜய் அவர்களே! கண்டிப்பாக நாம் இணைந்து செயல்படுவோம். வாழ்க, வளர்க தங்கள் தமிழ்ப்பணி.

  பதிலளிநீக்கு