சனி, 8 மார்ச், 2008

விழி!


சுற்றும் சுழலும் பம்பரமோ? –பனி
சொட்டும் மார்கழி இரவுகளோ?
வெட்டும் மறையும் மின்னலுமோ? –கணை
வீசும் காமன் வில்தானோ?

கனவுகள் சிறைப்படும் சிறையறையோ? –பல
காட்சிகள் காட்டிடும் திரையறையோ?
மௌனம் பேசும் சித்திரமோ? –மணி
ஊஞ்சல் ஆடும் ரத்தினமோ?

மையைத் தீட்டும் காகிதமோ? –பல
பொய்கள் தீட்டும் புலவருமோ?
மெய்மேல் வரைந்த ஓவியமோ? -இது
மெய்யோ? இதன்பேர் காவியமோ?

பூமனின் தூரிகை உடைந்ததுவோ? –அது
புருவத்தின் கீழ்வந்து விழுந்ததுவோ?
தாமரை வடிவில் தா-மரையோ? -இமை
சாமரம் வீசிடும் அரசவையோ?

இமைக்கை காட்டிக் காட்சிகளை –மன
இருட்டறைக் கழைக்கும் விபச்சாரி!
நமைப்பிறர் அறிந்திட அகம்காட்டி –தொடர்
நாடகம் ஆடிடும் கண்ணாடி!

பொருள்: பூமன்-பிரம்மன்; தா-மரை-தாவுகின்றமான்;

அகரம்.அமுதா

விழி!


இமையென்னும் திரையூடே
இரவுகளில் கனவுகளைத்
திரையேற்றிக் காணுகின்ற சுவைஞன் -மெல்லத்
திரைவிலகத் திறன்காட்டும் நடிகன்!

நாசியென்னும் தென்னையதன்
நற்கீற்றாம் இமை,புருவம்
காய்த்தாடும் பதமான இளநீர் –மனதில்
காயமென்றால் வடித்துவிடும் துளிநீர்!

புருவமென்னும் பெட்டையதன்
பூஞ்சிறகாம் இமையிருந்து
காட்சியிரை தேடியுண்ணும் குஞ்சு –தூக்கக்
கழுகுகண்டால் சிறகொளியும் அஞ்சி!

அணங்கையிடம் பிறையளவாய்
ஆண்களிடம் முழுநிலவாய்
இமைமுகிலின் பின்தோன்றும் நிலவு –நொடியில்
இதயத்தை செய்துவிடும் களவு!

அகரம்.அமுதா

வியாழன், 6 மார்ச், 2008

எழுதுகோல்!

பைதன்னில் இருப்ப தாலே
பயனொன்றும் இல்லை என்றே
கைதன்னில் தொட்டெ டுத்தேன்
காகிதப் பரப்பி லெங்கும்
மைதெளிப்பாய் என்ப தாலா?
மலரேட்டில் கவிதை யென்னும்
மெய்தெளிப்பாய் என்றே யன்றோ
விழைந்துன்னை தொட்டெ டுத்தேன்!

என்னருமை எழுது கோலே!
எடுத்துன்னை திறக்கும் போதே
பொன்னருமை ஏடாம் தன்னில்
பூக்காதோ கவிதை கோடி?
பண்ணருமை உணர்ந்த தாலே
பைந்தமிழைப் போற்று தல்போல்
உன்னருமை உணர்ந்த தாலே
உளத்தருகே உன்னை வைத்தோம்!

தலைக்கனத்தால் ஆடும் யாரும்
தலைக்குனிய நேரும் என்ற
தலையாயத் தத்து வத்தை
தரணியுள்ளோர்க் குணர்த்தத் தானோ
தலைக்குனிந்தே ஆட்டம் போட்டு
தற்குறிகள் கற்கும் வன்னம்
தலைப்பணிவை ஏட்டில் செய்து
தலைநிமிர்ந்தாய் பைகள் தோறும்?

கத்தியும்கை வேலும் சூலும்
கடுங்கூரென் றுரைப்பார் கூடப்
புத்தியினால் உன்னை யன்றோ
புகழ்கின்றார் கூரே என்று!
கத்தியினை எடுத்தார் சாவும்
கத்தியினால் தானாம்; உண்மை!
கத்தியினும் கூராய்! உன்னால்
கமழ்கிறதே கற்றோர் வாழ்வு!

அகரம்.அமுதா

எழுதுகோல்!

மையிட்டக் கோலதன்
மெய்பிடித்து –நன்
செய்யிட்ட ஏரன்ன
சேறடித்து...

பொய்யற்ற மெய்கொண்ட
பொருள்விதைத்து –நாம்
உய்வுற்று வாழவோர்
உரைவகுத்து...

உடுக்கைகொள் பையெனும்
உறைகிடக்கும் -நற்
தடக்கைகொள் எழுதுகோல்
தகைவிரிப்பேன்!

ஆலிலை முனையொக்கும்
கோல்முனைகாண் -அது
சாலைக்கொண் டள்ளொணா
சமுத்திரம்தான்!

தோள்வலி இலானையும்
திறனாக்கிடும் -எழுத்
தாளனாய்ப் புலவனாய்
ஆளாக்கிடும்!

மாளிகை மண்ணாகும்
வகைகற்றகோல் -சிறு
தூளியைத் தூணாக்கும்
தொகைகற்றகோல்!

நாவென்று நாம்வாழ
நானிலத்தே –ஓர்
தாவின்றிக் கற்பிக்கும்
தனிப்பெருங்கோல்!

மூப்பென்ற ஒன்றுடலை
மோகித்தபின் -கைக்
காப்பென்று ஆகும்மரக்
கம்பென்றகோல்!

அவ்வூண்று கோல்தாங்கி
அடங்கிடாமுன் -நம்
கையூண்றும் ஒப்பிலாக்
கோல்எழுதுகோல்!

எண்முனைந் தோதியதை
ஏற்றுஒழுகும் -பெண்
கண்முனை யொத்தகோல்
தாளிலழுவும்!

மாடிமனைத் துயின்றிடும்
மாந்தருக்கும் -தெருக்
கோடிமுனைத் துன்புறும்
கூட்டத்திற்கும்...

ஏட்டில்முனை வைத்தழுவும்
எழுதுகோலே –அவர்
பாடுயற பகுத்தறிவின்
திறவுகோலே!

பொருள்:- உடுக்கை –உடை; தூளி –தூசி; தொகை –கணக்கு;

அகரம்.அமுதா

ஞாயிறு, 2 மார்ச், 2008

என்னைப் பற்றி!

நான்:-
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!

ஊர்:-
கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!

தாய்:-
சோறெனக்(கு) ஊட்டி பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்அஞ் சலம்!

தந்தை:-
கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி;
ஊனெடுத்த தேவன் உரு!

பெயர்க்காரணம்:-தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!

அகரம்.அமுதா

தமிழ் வணக்கம்!

பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென்
பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த
மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே!
குழவி எனையெடுத்துக் கொஞ்சு!

கோடிப் புலவருள் கோமகளே! என்னைநீ
தேடிக் களைப்புறச் செய்வேனோ? –நாடியெனை
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்!

அகரம்.அமுதா

அவையடக்கம்!

அவைக்கண் நிறைந்த அறிஞர் இருக்க
நவைக்கண் உறைநான் நவிலும் -கவியால்
'தலைக்கனம் உண்டெ'னச் சாற்றார்; கவைத்தாட்
கிலைதலை என்பதால் இங்கு!

பாடும் வகையறிந்து பாடுகின்ற பாவலர்கள்
நாடும் அவைமுன்னம் நான்தோன்றல் -ஓடும்
மடைநீர் குடித்து வளர்நெல் மணிகட்(கு)
இடைபுல் எழுதற்(கு) இணை!

அகரம்.அமுதா