வெள்ளி, 13 டிசம்பர், 2013

பூதான் எல்லாம்!


கருங்கூந்தல்; பூ வந்து -
இருங்கூந்தல்;
கருப்பருவி வழிந்தாற்போல்
வருங்கூந்தல்;
பாண்டியனுக்கு ஐயமும் -
பரமனுக்குப் பாடலும் -
தருங்கூந்தல்!

இத்தகு கூந்தலால்
எழிலுற்றாள் பூவை;
ஆம் -
அக்கூந்தல் தானே
அணலாய்ச் சுட்டது -
நற்றமிழ்ப் பாவலன்
நக்கீரன் நாவை?

ஏந்திழையைப் பூவையென
ஏன் சொன்னார்?
அவர் -
அப்படிச் சொல்லுதற் கேதுவாய்
வகிடெடுத்து வைகலும் -
வாரும் கூந்தலில் -
நாறும் பூவைத்து
நின்னார்!

பூவுக்கும் ஏழு; அதுசூடும் -
பூவைக்கும் ஏழு!
பருவம்; உறும் -
உருவம்!

அரும்பு;
முகை;
போது;
அலர்;
மலர்;
வீ;
செம்மல்; இவை -
செண்டுக்குரிய ஏழு;

பேதை;
பெதும்பை;
மங்கை;
மடந்தை;
அரிவை;
தெரிவை;
பேரிளம்; இவை -
பெண்டுக்குரிய ஏழு!

செண்டு;
பெண்டு;
பிறப்பது ஓரிடம்; மணந்து -
பிழைப்பது வேறிடம்!

“பூவில் கள்ளுண்டு; அப் -
பூவில் கள்ளுண்டு -
ஊதியது வண்டு –
ஊட்டிய பூவையே
ஒண்சங்காய்க் கொண்டு!”

பூ -இப்படி
புகழேந்தியை சொல்லவைத்தது; அது-
நவையென்று
நக்கீரனை விள்ளவைத்தது!

தாமரை;
மா;
அசோகம்;
முல்லை;
கருங்குவளை; எனும் -
அம் பூ; ஐந்தும் -
அம்பு; அவை -
காமன்
கருவி;

யௌவனப் பருவம் எய்திய -
யாரையும் விடாது
எல்லியும் பகலும்
ஏகாந்தத்தில்…
உளத்தை;
நலத்தை;
உயிரை;
உணர்வை;
பொன்றுந் தனையும்
போகும் உருவி!

கோவே எனினும் -
குறைகாணின்
தேவே தடுத்தும் -
சீற்றம் தணியாது…
முனியும்
முனியும் -கண்டு
அஞ்சம்பு –அவ்
அஞ்சம்பிற்கு
ஆர்தான்
அஞ்சாதார்?

நெஞ்சில் அச்சம்
நிலைகொளினும் -
அஞ்சில் ஒன்றையேனும்
அங்கத்தில் பாய்ச்ச -
அனங்கனை -
ஆர்தான் கெஞ்சாதார்?

பூ –ஓர்
இயற்கை வயாகரா;
அதை -
நுகர்ந்தால் பாயும் -
நொடியில் -
நரம்பில் –மோக
நயாகரா!

பூ –இது
பூவையும் குறிக்கும்;
பூமியையும் குறிக்கும்!

நிலங்கள் ஐந்து; அந் -
நிலங்களின் பெயர்களாய்
இலங்கும்
மலர்கள் ஐந்து!

குறிஞ்சி;
முல்லை;
மருதம்;
நெய்தல்;
பாலை; இவை -
மலர்களின் பேர்; ஐந்து -
நிலங்களின் பேர்;
திணைகள் ஐந்தும்; பூ -
மனைகள் ஐந்தும்;
பேர் ஒன்றப் பெற்றது
பெருஞ்சீர்!

ஐந்நிலம் -
ஆயினும்
அவ் -
ஐந்நிலத்திற்கும்
நிலைத்த பேர் என்னவோ
நானிலம்!

குறு நிலம்;
பெரு நிலம்;
என -
இரு நிலம் ஆண்ட
மன்னவர்; புகழ்பூத்த -
தென்னவர்; உருமும் உழுவை -
அன்னவர்; தமிழுக் கரணாய் -
நின்னவர்; பாரை ஆண்ட -
முன்னவர்; போரில் வீரம் -
சொன்னவர்!

விரும்பி அணிந்தார்
விரைமலர்த் தாரை;
நறைதார் அணிந்தே
நடத்தினர் போரை! அது -
களப்போர் ஆயினும் சரி…
கலவிப்போர் ஆயினும் சரி…

புல்லவும்; செற்றாரை -
வெல்லவும்
தார் அணிந்தார்; அதன் -
சீர் தெரிந்தார்!

வெட்சி சூடியோன் -
வெகுநிரை கவர…
கரந்தை சூடியோன் -
கரவைகள் மீட்க…
வஞ்சி யணிந்தோன் -
வம்புக் கிழுக்க…
காஞ்சி யணிந்தோன் -
கடிதெதிர் ஊன்ற…
உழிஞை தரித்தோன் -
உடனரண் வளைக்க…
நொச்சி தரித்தோன் -
நின்றரண் காக்க…

தும்பை துவள -
தோள்வலி காட்டி…
இருபெரு வேந்தர் -
ஒருகளத் தாடி…
இரண்டில் ஒன்று பாத்தபின்பு…
இருவரில் ஒருவர் தோத்தபின்பு…
வாகை சூடியோன் –
சூடுவான் வாகை;
சூடிய வேந்தைச்
சூழ்ந்து -
குடிகள் யாவரும்
கூறுவர் ஓகை!

அற்றை நாளில்
ஆடவர்
ஆயிழையர்
அணிய
நறுமலர் தாரே -
நகை;
இற்றை நாளிலும்
எம்குலப் பெண்டிர்
அணியக் காரணம் -
அது புரியும் நகை!

பூ
புன்னகைக்கிறது…
செடியில்;
கொடியில்;
காவில்;
கழனியில் திருவோடு; அப் -
பூவனைய -
புன்னகையை…
யாண்டும்
யாசிக்கும் –நம்
வாய் இருக்கிறதே
வாய் –அது
வாயல்ல
வதனம் ஏந்திய திருவோடு!

பூக்கள் பயன்படுகிறது -
பூசைக்கும்;
கட்டில்மேல்
இருவர் வைக்கும்
ஆசைக்கும்!

பூக்கள்தான் எல்லாம்; இங்குப் -
பூவின்றி -
விழவும் இல்லை;
இழவும் இல்லை!