சிலையைப்போல்
அமைதி காக்கும்
திரனெல்லாம் பெற்றும் வெந்நீர்
உலையைப்போல்
கொதித்தெ ழுந்துன்
உப்புநீர் அலைக்கை நீட்டி
மலையைப்போல்
உறுதி கொண்ட
மக்களைத் தாக்கி எச்சில்
இலையைப்போல்
கிழித்து வீசி
எறிந்ததேன் கடலே! வண்ண
முலையூட்டும்
தாயின் மார்பில்
மிதித்திடும் பிள்ளை போல
அலைநீட்டிக்
கரையை நீயும்
அன்றாடம் மிதிக்கும் போதும்
இலையீது
வன்மம் என்ற
ஏமாப்பில் வாழ்ந்தி ருந்தோம்
தலைமீதே
ஏறி நின்று
தாண்டவம் இட்ட தேனோ?
நீரலை
என்று நாமும்
நினைத்ததைப் பொய்யாய் ஆக்கி
நீரலை
அல்ல ஈது
நீவீசும் வலையே என்று
பாரவர்க்
குணர்த்தத் தான்நீ
பாய்ந்துவந் தாயோ? நன்றாய்ப்
பாரவர்
பட்ட துன்பம்
பற்பல பலவே யன்றோ?
தண்ணீரால்
ஆன ஆழி
தரைதனிற் கண்டோம்; உப்புக்
கண்ணீரால்
ஆன ஆழி
கன்னத்திற் காண வைத்தாய்;
உண்ணீருக்
காகா உன்னை
உலகினில் முக்காற் பங்காய்ப்
பண்ணிய
கார ணத்தால்
பாழ்செயல் புரிந்திட் டாயோ?
வாரிதி
என்றோம் உன்னை;
வளம்பல கொண்ட நீயும்
வாரியே
தருவாய் என்ற
வாஞ்சையில்; ஆனால் நீயோ
வாரிதின்
றாயே எங்கள்
வளங்களை; உயிரை; ஈது
சீரிலாச்
சிறப்பு மில்லாச்
செய்கையென் றுணர்ந்த உண்டா?
வேலையென்
றுன்னை நாமும்
விளித்திட நீயோ வெட்டி
வேலைகள்
செய்யத் தானே
விழைந்தனை; அலைகள் என்னும்
வாலையே
ஆட்டு கின்ற
வல்வெறி நாயே! நீஆன்
தோலையே
போர்த்து நின்று
துயர்தரும் நரியே யன்றோ?
நீருள(து)
ஈரம் இல்லை;
நினைக்கடல் ‘அம்மா’ வென்றிங்(கு)
ஆருரைத்
தாரோ? அந்த
அறிவிலிச் செயலைச் சுட்ட
பேருடற்
பேயே! நீயும்
பெயர்ந்துவந் தாயோ? உப்பு
நீருடல்
நோயில் வீழ
நீயழி வெய்தி டாயோ?
உப்பிட்ட
பேரை என்றும்
உள்ளுதல் எங்கள் பண்பாம்;
உப்பிட்ட
நீயோ எங்கள்
உயிர்கொளல் என்ன பண்பாம்?
உப்பிட்டுத்
தின்றால் தோன்றும்
உணர்ச்சி;உன் உடலம் எங்கும்
உப்புள்ள
போதும் கொஞ்சம்
உப்புக்கும் உணர்ச்சி உண்டா?
கடலென்றோம்
உன்னை; நீயோ
காலனை ஒத்தாய்; உப்பு
உடலென்றோம்;
உடனி ருந்தே
உயிர்க்கொல்லி யானாய்; தண்ணீர்த்
திடலென்றோம்;
நிலப்ப ரப்பைத்
தின்னநாள் பார்த்தாய்; முந்நீர்க்
குடமென்றோம்;
சாக்கா
டீந்து
குடமுடைக்கும் குறிக்கொள் கொண்டாய்!
கொலை மடலன்று முத்து குளிக்கையில்
பதிலளிநீக்குகுளிர்காற்று கொண்டாட்டம் குதுகலிக்கையில்
ஆறடி மனிதனுக்கு ஆனந்தம் அமைதியாருக்கையில்
கடலாடி பாடினால் அகோரம்தான்
கொலையாளி என்றீர் எம்மை
பதிலளிநீக்குகூறுவது கேட்பீர் யானோ
அலையாக கைகள் நீட்டி
அன்போடு காத்தேன் மண்ணில்
மழையாகத் தந்தேன் என்னை
மறந்தாரே மாந்தர் தம்மின்
பிழையான வினையால் அன்றோ
பெருந்துயரம் விளைந்த தன்று...
பொங்காமல் பொறுமைக் கொண்டேன்
புரியாமல் தவறி ழைத்தீர்
மங்காத புகழு டையீர்
மாக்கடலின் நன்மை எல்லாம்
தங்காதே கழிவை கூட்டி
தண்ணீரில் மண்மீ தென்றே
எங்கனமும் எறிந்தீர் மெல்ல
இயற்கையினை இழியச் செய்தீர்
மண்ணெல்லாம் குடைந்தீர் நாளும்
மரமெல்லாம் வெட்டி மாசு
விண்ணெல்லாம் நிறைய வெப்பம்
விரைந்திங்கு உயரச் செய்தீர்
உண்மையைனீர் உணரச் சொல்வேன்
உலகன்னை நெஞ்சம் நோக
கண்ணெண்ணும் கரையைத் தாண்டி
கசிந்ததன்றோ கடலின் நீரும்....
நன்றிகள் வேல்முருகன் அவர்களே
பதிலளிநீக்குதோழி உமா அவர்களின் கவிதை மிக அருமை. மனிதர்கள் செய்யும் தவற்றை உணராதவன் அல்ல நான். ஒட்டுமொத்தமாக மனிதர்கள் செய்யும் பிழையால் தான் இயற்கை சீற்றம் கொள்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இயற்கை மாற்றத்திற்குக் காரணம் கீழ்த்தட்டு மக்களோ, நடுத்தர மக்களோ ஒரு விழுக்காடுகூட காரணம் இல்லை என்பேன் நான். பெரும் பெரும் தொழிற்சாலைகளை எழுப்பி ஓசோனில் ஓட்டை போடுவது மேல்தட்டு வர்க்கமா? கீழ்த்தட்டு வர்க்கமா? இயற்கையை அதிரச் செய்யுமாறு அணுகுண்டு சோதனைகளையும் ஏவுகளை சோதனைகளும் செய்வது அரசா? அல்லது குடிமக்களா? கயமை அரசுகளும் முதலாளி வர்க்கமும் செய்யும் தவறுகளை மறைக்க அறிவு படைத்த விசமிகளால் கதைகட்டி விடப்பட்டதே ஒட்டுமொத்த மனித இனம் செய்யும் பிழையால் தான் இயற்கை சீற்றம் கொள்கிறது என்பது. நம்மில் பலருக்கும் சிந்திக்கும் அறிவின்மையால் நாமும் அதையே ஒப்பிக்கிறோம். சரி. எனது வசிப்பிடத்திற்கும் கடலுக்கும் சற்றேறக் குறைய 150 கி.மீ மேல் இருக்கையில் கடல் மாசுபடுவதற்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? கடல் மாசுபடுவதற்கு நான் ஒருவிழுக்காடு கூட காரணமாக முடியாதே!
புகை பிடிக்கும் பழக்கம் கூட இல்லாதவன் நான். பின்பு எப்படி ஓசோனில் ஓட்டை விழுவதற்கு என்னையும் காரணம் கூறமுடியும்? நீங்களோ நானோ அன்றாடம் பயன்படுத்தி எறியும் பொருட்களை எரிப்பதாலோ, சமையலுக்காக விறகடுப்பு எரியவிடுவதாலோ துளியும் ஓசோனுக்குப் பாதிப்பில்லை. அதற்கு நிலையாக புகையைக்கக்கும் பெரும் பெரும் தொழிற்சாலைகளும் பேரளவிற் பயன்படுத்தும் வாகனங்களாலுமே பாதிப்படைகிறது. மற்ற எல்லா இயற்கை பாதிப்பிற்கும் இதுவே பேரளவு பொருந்தும்.
நீங்கள் கூறும் மனித இனத்தின் 90 விழுக்காடு மக்களால் வெறும் பத்து விழுக்காடு அளவிற்கும் குறைவாகத்தான் இயற்கை பாதிப்படைகிறது. மீதமுள்ள 10 விழுக்காடு மனித இனத்தால்தான் 90 விழுக்காட்டிற்கும் மேலாக இயற்கை பாதிப்படைகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
தொல்லுலிகல்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை --- என்றுதான் அவ்வை சொல்லியிருக்கிறாளே ஒழிய
தொல்லுலகில்
தீயார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் நிகழும் பிழை -- என்று சொல்லவில்லை. ஆக 2004ல் ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களோ, அதற்குப் பிறகு ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களோ, அல்லது நிலநடுக்கத்திற்கு மழையின்றிப் பஞ்சத்திற்கு ஆட்பட்டவர்களோ இயற்கைக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாதவர்களே. பாதிப்பை ஏற்படுத்தியவர்களெல்லாம் சொகுசாக வாழ்கிறார்கள்.
நாமோ, பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம் பேசுகிறோம்.
ஐயோ இங்கு எங்கு வந்தது கீழ், மேல் என்கிற பேதங்கள். இயற்கையின் சீற்றத்தின் முன் கீழ் மேல் என்ற பாகுபாடுகளைக் கண்டதுண்டா.அவள் கொடுக்கும் போதும் சரி கெடுக்கும் போதும் சரி பேதம் பார்ப்பதில்லை. மனித மனங்களில் தான் எல்லா பேதமும்,என்னேரமும். கணிணியைப் பயன் படுத்தும் நீங்களும் பிளாஸ்டிக் பேனா மற்றும் பலப் பொருட்ட்களை பயன் படுத்தும் யாவரும் ஒருவகையில் அவளை வதைக்கிறோம். எது தவிர்க்கப்படவேண்டியது. எது தவிர்க்க முடியாதது என்பது வேறு விவாதம்.
பதிலளிநீக்குஆம் தோழி. தங்கள் கருத்தை ஏற்கின்றேன்
பதிலளிநீக்கு