சந்தப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூலை, 2026

 

விற்குறி தப்பா

மிதிலை ராமனை

விஞ்சிய கற்பினனே! – மிகவே

நெஞ்சுரம் மிக்கவனே!

நற்பரி வாரம்

நாற்புறம் சூழ

நடமிடும் கற்றவனே! – திட்டை

நகரின் கொற்றவனே!

 

முதலிடை கடைஏழ்

வள்ளலின் உருவே!

வையை தமிழ்மகனே! – எங்கள்

வணக்கத்திற் குரியவனே!

சிதம்பர நாதன்

செல்வன் முருகனைச்

செதுக்கிய உருவினனே! – ஈந்தே

சிவந்த கரத்தினனே!

 

பொன்கிடைத் தாலும்

புதன்கிடைக் காதிதைப்

பொய்யெனச் செப்பா வாய்! – நீ

புதனுக் கொப்பாவாய்!

தன்நா நனைக்குமுன்

தஞ்சம் அடைந்தோர்

தாகத்திற் கப்பாவாய்! – அவர்

சாத‍த்திற் குப்பாவாய்!

 

உரிய யாவையும்

உதவும் வகையில்

நீதான் முன்னேரு – நீ

மென்மேல் முன்னேறு!

பெரியோன் பிரேமும்

சிறியோன் வினோத்தும்

தொடரும் பின்னேரு! – அவர்போல்

உளரிங்குப் பன்னூறு!

 

வையம் அளந்து

வானம் அளந்த

வாமன‍ன் நீயல்லவோ! – நீ

வாலாம்பாள் சேயல்லவோ!

ஐயம் இடுவதும்

அதைமறந் துடனே

அளிப்பதுன் தீர்ப்பல்லவோ! – நீ

கண்ணனின் வார்ப்பல்லவோ!

 

வண்ணங்கள் நூறு

வழங்கு வழங்கென்று

வானவில் கேட்காதா? – உன்னிடம்

வான்மழை தோற்காதா?

கன்னம் சிவந்த

கவின்நிலா முற்றத்தில்

கைகட்டி நிற்காதா? – உன்னிடம்

கடமையைக் கற்காதா?

 

மடாதி பதிகளும்

படாதி பதிகளும்

வாசலில் காக்கின்றார்! – உன்

வருகையை வேட்கின்றார்!

விடாது அரசியல்

விரைவில் அதிலுன்

வரவெதிர் பார்க்கின்றார்! – முன்பு

வந்தவர் வேர்க்கின்றார்!

 

புதுவை மதுவும்

மதுரை தமிழும்

மருவிய திருமானே! – கொடை

வள்ளல் பெருமானே!

எடுக்கும் படங்களில்

எனக்கொர் பாடல்

எழுத‍த் தருவானே! – அதற்கு

ஈசன் அருள்வானே!

 

அகரம் அமுதன் 9940723625

புதன், 17 ஜூன், 2026

 

எனக்குள் அவள்!

 

பூமேல வண்டமர்ந்தாற் போலஅவள் நெனப்பு – என்

புத்திக்குள்ள படமோட்டும் பொன்முகத்து வனப்பு!

 

தேனள்ளித் தெளிக்குமவள் தெத்துப்பல் சிரிப்பு – இள

மான்துள்ளிக் குதிப்பதுபோல் வார்த்தைகளின் விரிப்பு!

 

அவள்வீட்டுக் கதவுக்கும் கண்முளைக்கும் புதுமை

அடஅந்தப் புதுமைக்குக் காரணம் அப்பதுமை!

 

காற்றாகப் பறக்குமவள் கால்தடத்தைத் தேடி – ஒரு

கற்பூரம் ஏற்றலன்னா மனம்போகும் வாடி!

 

அவள்தொட்ட காகிதப்பூ மணம்வீசும் வீசும் – அட

அதைக்கண்டு பொறுக்காம அல்லிபுறம் பேசும்!

 

என்னுதட்டில் ஓடுது ஒருமுத்த ஆறு – அதில்

உள்நீச்சல் அடிக்கஅவள் உதடுகொள்ளும் வீறு!

 

பல்குத்த அவளுக்கென் மீசைநுனி தோது – அவ

ஆசைகளை மாட்டிவைக்கும ஆங்கர்என் காது

 

வாடையது மடல்திறந்து வாசமள்ளித் தெளிக்க – உடன்

தேடியங்கு வண்டுவந்து தேன்கடலில் குளிக்க…

 

அவநெனப்பு வந்துவந்து ஆனைவெடி வெடிக்க – தெனம்

சிவனேன்னு இருப்பதுபோல் எப்படிநான் நடிக்க?

 

போல்லாத கடவுள்ஏன் பொம்பளைய படைச்சான் – அவ

இல்லாத இடையின்மேல் இன்பத்த வைச்சான்?

வேண்டுமோ இன்னோர் சுதந்திரம்!?

 

வேண்டுமோ இன்னோர் சுதந்திரம்!?

 

விடுதலை வேட்கையின் வீரியம் கண்டு

வெள்ளையன் ஓட்டம் எடுத்தானே! – அவன்

கடமையைச் சரியாய்ச் செய்த நல்லவர்

கைகளில் நாட்டைக் கொடுத்தானே!

 

எதற்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்று

இவன்கையில் ஓட்டைக் கொடுத்தானே–அதன்

மதிப்பை உணரா மடயன் ஓட்டைப்

விற்றே நாட்டைக் கெடுத்தானே!

 

தீயவர் என்று தெரிந்த பின்னாலும்

தேர்தலில் பலரை வெல்லவைத்தான்!

தகுதியில் லாரைத் தலைவர் ஆக்கித்

தனக்குத் தானே கொல்லிவைத்தான்!

 

பெற்ற சுதந்திரம் பேணிக் காத்த

பெருமை இவனுக் கிருக்கிறதா?

குற்றம் குறைகள் கூறிட மட்டும்

குறிப்பாய்த் திருவாய் திறக்கிறதா?

 

சுட்டு விரல்போய் மற்றவர் மீது

குற்றம் சாட்டும் போதினிலே

மற்ற விரல்கள் தன்னை நோக்கி

வழக்கு ரைப்பதை அறிவதில்லே!

 

எதையும் இங்கே விமர்சனம் செய்வதில்

ஏற்றம் என்ன இருக்கிறது?

எதிலே பிழையோ இறங்கிச் சரிசெய்

மாற்றம் அதிலே பிறக்கிறது!

 

சாக்கடை நாற்றம் காற்றில் கலந்தால்

மூக்கினை மூடுதல் முறையில்லை!

சீக்கிரம் இறங்கிச் சுத்தம் செய்யும்

போக்கினை வளர்த்தால் குறையில்லை!

 

வீதியில் ஏதும் விபத்து நடந்தால்

வேடிக்கை பார்ப்பது வீரமில்லை!

தன்படம் எடுத்துத் தம்பட்டம் அடிக்கும்

தரங்கெட்ட செய்கை மாறவில்லை!

 

 

கண்முன் நடக்கும் கொடுமைகள் கண்டால்

கண்வாய் செவியைப் பொத்தாதே!

புலனம் கீச்சகம் முகநூல் தன்னில்

போர்வீ ரன்போல் கத்தாதே!

 

தனிமனி தன்தன் சுதந்திரம் இங்கே

தறிகெட்டுத் தானே கிடக்கிறது!

வனிதையர்க் கெதிராய் வருடம் முழுதும்

வன்கொடு மைகள் நடக்கிறது!

 

மருமகள் தொட்டால் மட்டும் தானே

மண்ணெண்ணை அடுப்பு வெடிக்கிறது!

கருவில் சுமந்தது பெண்சிசு வானால்

கள்ளிப் பாலைக் கொடுக்கிறது!

 

சின்ன புத்தி மனுஷன் வக்கிரம்

சிறுமியைக் கூட விடவில்லை

என்ன சட்டம் இயற்றி என்ன?

எதற்கும் இவன்பயப் படவில்லை!

 

இறைவன் ஒருவன் இருக்கின் றான்அதை

இதயத் தில்எவன் நிறைக்கின்றான்?

இறக்கும் வரையில் எகிறி குதித்து

இறுமாப் பில்தான் திளைக்கின்றான்!

 

மெலியோன் என்றால் ஏறி மிதித்து

வலியோன் புத்தி சுகப்படுது!

எலியைப் பூனையை நாயைப் பார்அந்

நாயோ கல்லுக்குப் பயப்படுது!

 

இருப்போர் கைகள் இல்லார் கண்டால்

எடுத்துக் கொடுக்க நீள்கிறதா?

ஒருசாண் வயிற்றின் உறுபசி போக்க

உலகப் போர்கள் மூள்கிறதா?

 

படித்தான் எல்லாம் படித்தான் ஆனால்

பகுத்தறி வென்பது வளர்கிறதா?

அடுத்தவ ரோடு இணங்கி இருக்க

அன்பும் அறனும் மலர்கிறதா?

 

நடக்கிற மனிதன் தவறி விழுந்தால்

பாதையின் மீது பழியென்ன?

அடுத்தவன் மீது பழியைப் போடும்

அறிவால் விளைந்த பயனென்ன?

 

உன்னைத் திருத்து உன்னைப் புதுக்கு

உலகைப் பின்னர் உற்றுப்பார்

உன்னில் உண்மை உறைந்து கிடந்தால்

உலகோர் உன்னை ஒத்துப்பார்!

 

இருக்கிற சுதந்திரம் போதும் இங்கே

இன்னொரு சுதந்திரம் கேட்காதே!

இருப்பதை வைத்து இன்பமாய் வாழ்ந்தால்

இன்னல் வந்து தாக்காதே!

                                                அமுதன்

கலியுக காதல்

 

கலியுக காதல்

 

கண்ணும்கண்ணும் முட்டிக்கிட்டா

காந்தம்போல ஒட்டிக்கிட்டா

காதலுன்னு சொன்னதெல்லாம் அப்போ

நேரம்பாத்து நெருங்கிக்கிட்டா

ஓரம்பாத்து ஒதுங்கிக்கிட்டா

காதலுன்னு சொல்லுறாங்க இப்போ!

 

நாள்முழுக்கப் பார்க்காம

நாலுவார்த்தை பேசாம

நேசம்வச்ச காலமெல்லாம் அப்போ!

காதோடு செல்பேசி

காமம்சொட்டக் கதைபேசி

காலத்தைக் கடத்துறாங்க இப்போ!

 

நுனிவிரலைத் தொடுவதற்கே

நூறுமுறை யோசிக்கிற

நுட்பத்தோடு காதலிச்சான் அப்போ!

கொஞ்சிக்கொஞ்சிப் பேசிக்கிட்டு

தொட்டுத்தொட்டுப் பாத்துக்கிட்டு

தொடருவதை காதல்ங்கிறான் இப்போ!

 

பார்வையால உசுர்பிழைக்க

வார்த்தையால மனம்தழைக்க

மென்முறையில் காதல்செஞ்சான் அப்போ!

வக்கிரமா படம்புடிச்சி

வஞ்சனையா வசனம்பேசி

வன்முறையாக் காதலிக்கிறான் இப்போ!

 

இதயத்துக்குள் பூத்தகாதல்

இல்லேன்னு ஆகிப்புட்டா

இன்னுயிரை மாச்சிக்கிட்டான் அப்போ!

சம்மத்தைச் சொல்லலேன்னா

காதல்கீதல் பண்ணலேன்னா

கத்தியால குத்தவர்றான் இப்போ!

 

ஏழையாக இருந்தாலும்

ஏமாத்த மாட்டான்னு

ஏத்துக்கிட்ட காலமெல்லாம் அப்போ!

ஷாப்பிங்மால் கூட்டிப்போக

வீக்எண்டில் டேட்டிங்போக

வசதியான ஆள்தேடுது இப்போ!

 

தோதாக ஒருநாளில்

தூதாகத் தோழிபோய்

முழுசாகத் திரும்பிவந்த தப்போ!

சொல்லச்சொன்ன சேதிவிட்டு

கூடிஆடி மோகப்பட்டு

முழுகாமத் திரும்பிவருது இப்போ!

 

வயசக்கட்டிப் போட்டுப்புட்டு

மனசவச்சிப் பூட்டிப்புட்டு

கற்புநெறி காத்ததெல்லாம் அப்போ!

பத்துமுறை ரூமுபோட்டு

ஒத்திகைகள் பார்த்துப்புட்டு

ஓவர்நைட்டில் ஆளமாத்துது இப்போ!

 

உடலும்உடலும் எட்டிநின்னு

உயிரும்உயிரும் ஒட்டிநின்னு

உருகிக்காதல் செஞ்சதெல்லாம் அப்போ

கண்றாவியா உடுத்திக்கிட்டு

கண்டபடி தடவிக்கிடும்

கருமத்தைதான் காதலுன்றான் இப்போ

 

உசுரப்பிழியும் கவிதைதீட்டி

மனசதப்பிழியும் வரிகள்ஊட்டி

வலிமைசேர்த்த காதலெல்லாம் அப்போ!

வக்கிரமா படம்புடிக்கும்

வஞ்சகமா வசனம்பேசும்

வன்முறையைக் காதல்ங்கிறான் இப்போ!

 

 

உசுரஉருவி யெடுத்துநீட்டி

உருகும்மனச அதுலகாட்டி

உண்மையாகக் காதல்செஞ்சான் அப்போ!

அசிங்கமாகப் படம்புடிச்சி

ஆசிட்முட்டை பயத்தைக்காட்டி

அடாவடி காதல்செய்றான் இப்போ!

திங்கள், 15 ஜூன், 2026

பம்பரம்!

 

பம்பரம்!

 

ஒற்றைக் காலில் நின்றபடி

உன்னை என்னை பார்த்தபடி

சற்றே காற்றைக் கிழித்தபடி

சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?

 

நிலையே இல்லா இவ்வாழ்வில்

நிலைத்து வாழ வேண்டுமெனில்

நில்லா துழைத்தல் வேண்டுமென்று

நிற்கும் பம்பரம் சொல்கிறது!

 

ஊனம் உடலில் இல்லையென்றும்

உளத்தில் தானது உள்ளதென்றும்

காணும் பேரைக் கூப்பிட்டுக்

கனிவுடன் பம்பரம் சொல்கிறது!

 

வட்டத் துள்ளதை சிறைவிடுத்து

வாழ்வ ளித்திடும் தன்னைப்போல்

இட்ட முடனே எல்லோர்க்கும்

இயன்றது செய்திட இயம்பிடுது!

 

தலைக்கனம் கொண்டே ஆடுவதால்

தாழ்வே வந்து சேருமென்று

தலையை ஆட்டித் தக்கபடி

தண்மையாய்ப் பம்பரம் சொல்கிறது!

 

தன்னைச் சுற்றும் சாட்டைக்கே

தன்னை வழங்கும் பம்பரம்போல்

உன்னை சார்ந்த உறவுக்கும்

உன்னை ஈந்திடு என்கிறது!

 

சொந்தக் காலில் நிற்பதுதான்

சுகத்திற் சிறந்த சுகமென்றும்

அந்தப் பம்பரம் சொல்கிறதே!

அழகாய் நிமிர்ந்து நிற்கிறதே!