ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஒத்தக்கல்லு மூக்குத்தி

ஒத்தக்கல்லு மூக்குத்தி
ஓரப்பார்வ மீன்கொத்தி
நாம்புடிச்ச அத்தமக
நளினமான மான்குட்டி!
(ஒத்தக்கல்லு)
கன்னம்ரெண்டும் பூச்சட்டி
கட்டுங்கூந்தல் கரிச்சட்டி
அச்சில்வார்த்த அந்தப்புள்ள
அதரம்ரெண்டும் கருப்பட்டி
அமஞ்சபுருவம் மண்வெட்டி
அழகுமேனி பொன்கட்டி
எதிர்த்துத்தோத்த வட்டநெலா
எட்டிநிற்குது வரிகட்டி
(ஒத்தக்கல்லு)
பற்களெல்லாம் பனிக்கட்டி
பரந்தமார்பு தேர்முட்டி
பூச்சுழியும் பூத்திருக்கும்
இடுப்பதன்கீழ் இருக்கொட்டி
ஆலங்கட்டித் தொடைதட்டி
அங்குமிங்கும் நடைகட்டி
வருமவளைக் கொண்டாடும்
அகிலவுலகம் கைதட்டி
(ஒத்தக்கல்லு)
எம்மனசில் குழிவெட்டி
காதலென்னும் விதைகொட்டி
ஆசைநீரை வார்த்துவந்த
அவளேஎன் அசல்வட்டி
அன்பென்னும் நெரிகட்டி
நாணத்தைச் சரிகட்டி
கட்டிலோடு கண்விழித்துக்
கதைபடிக்கும் சிறுமெட்டி

2 கருத்துகள்:

  1. ஒத்த கல்லு மூக்குத்தி-என்
    உள்மனசு உள்குத்தி
    சத்த மிட்டு பாடவே-நல்ல
    சந்தத்தோடு ஆடவே
    முத்துபோல மின்னுது-ஒளி
    மின்னலொளி பன்னுது
    தத்தும்கிளி அழகிது-நம்
    தமிழ்மரத்தின் பழமிது

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. அழகான பாடல் வரிகளாலேயே வாழ்த்தியிருக்கிறீர்கள் வாழ்க அய்யா

    பதிலளிநீக்கு