ஞாயிறு, 25 அக்டோபர், 2026

திசைமாறிய பறவைகள்!

 

திசைமாறிய பறவைகள்!

நீகுடித்த எச்சில்பால்
நான்குடித்து வளர்ந்ததாலா
நான்புசித்த மீதத்தில்
நீபசி ஆறிவந்தாய்?

ஒட்டிப் பிறந்தவர்போல்
உன்நிழலில் நான்நடக்க...
எட்டிப் பிரியாமல்
என்னளவில் நீபழக...

அண்ணன் தம்பிக்குள்
அழியாத நட்பொன்று
அரும்பாய்ப் பூத்துவர
அதிசயிக்கும் ஊர்கண்டு!

பாட்டில் நயமொளிக்கும்
பண்பெனவே நீயொளிய...
பூப்பூவாய்த் தேன்தேடும்
பொன்வண்டாய் நான்தேட...

ஓடி விளையாடி
ஒருவாறு ஓய்ந்தபின்னே...
ஆடித் தடுமாறி
வீடுவந்து சேர்ந்தபின்னே...

அடிவயிற்றுப் பசியாற
அன்னமிடும் தாயின்
மடியோடு நானமர...
மண்ணோடு நீயமர...

என்ன நினைத்திருப்பாய்?
ஏன்பிறந்தான்? என்றிருப்பாய்!
உன்னுரிமை நான்கொள்ள
ஓரவிழி வேர்த்திருப்பாய்!

கைவைத்த மேலாடை

அங்கங்கே கிழிந்திருக்கும் – கிழிசல்

தைத்த நூலிணைத்தால்

புத்தாடை கிடைத்திருக்கும்

வறுமைவெள் ளாவிதன்னில்

வாழ்க்கை நமையிட்டு

வெளுத்த‍அந்த வேளையிலும்

வெளுத்ததில்லை நம்பாசம்

 

வாழ்க்கை வானத்தில்

வளர்பிறையா னோம்அன்பு

சூழ்ந்து செங்கதிராய்ச்

சுடர்தந்த காரணத்தால்...


சிறுவயதில் நமக்குள்ளே
சுயநலங்கள் இருந்ததில்லை...!
சிறகுகளை விரித்தாலும்
திசைமாறிப் பறந்ததில்லை...!

பருவம் போனதினால்...
பாழுலகம் புரிந்ததினால்...
திருவில்லாத் தன்னலங்கள்
சிந்தைக்குள் புகுந்ததினால்...

சொத்தைப் பிரித்துவிட்டோம்!
சுமந்தவரை பிரிந்துவிட்டோம்!
பத்தோடு பதினொன்றாய்ப்
பார்ப்பவருக் காகிவிட்டோம்!

தனக்கென்று சிறகுகள்
தனித்தனியாய் ஆனதினால்
திசைமாறிப் பறந்துவிட்டோம்!
திரும்பிவர மறந்துவிட்டோம்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக