பகடி வெண்பா!
தனிமரமே! உந்தன்
தனிமை அகற்ற
கனிவனமே வாய்த்த
கதைசொல்! –
இனிமைமிகு
வண்ண முகம்கண்டேன்;
மையலுற்றேன்; என்போலும்
பெண்ணவளும் பெற்றாள்
பிணி! (1)
மாவதை செய்யும்
மதன்அம்பில்
தப்பிக்கத்
தேவதை உன்னையே
தேர்ந்தனளோ? – பூவமளிப்
போர்க்குப் பொருந்தும்
பொலிவினன் என்றேதான்
பார்த்துடன் பட்டாள்
பசித்து! (2)
எண்ணம் உரைக்க
எளிதில் உணர்த்திட
மண்ணில்வாய்ப் பேச்சுக்கு
மாற்றுண்டோ? – கண்மொழி
கற்றுத் தெளிந்தால்
கதைஅளக்கும்
வாய்ப்பேச்சு
வெற்றுப் பகட்டென்பாய்
வெந்து! (3)
நின்றுதான் பேசிமிக
நெஞ்சம் உணர்த்துதல்
ஒன்றுதான் கண்ணின்
உயர்வாமோ? – நன்றுகேள்!
ஐம்புலனில் கட்புலனே
போய்த்தீண்டி இன்புநல்கும்
மொய்ம்புடைய(து) என்பேன்
முனைந்து! (4)
உரியமொழி பேசி
உணர்த்தற் குரிய
கரியவிழிக்(கு) இன்னோர்
கவின்சொல்! –
உரியவரைத்
தன்னுள்ளே வைத்துத்
தனதேக்கம்
தீர்க்குமே
அன்னியர் காணாத
வாறு! (5)
இல்லாள் உடன்நீ
இணைந்திடும் வேளையில்
நல்லாள் நயனமிடும்
கட்டளைசொல்? – பொல்லா
மதனம்பு பாய்ந்தெனக்கு
மையல் வழங்க
மதனுக்கிம் மங்கை
விழி! (6)
என்றுமில்லாப் பேருவகை
இன்றுநீ கொண்டவகை
ஒன்று விடாமல்
உரைப்பாயோ? – இன்றுவரை
கொல்லரவம் போலென்னைக்
கும்மிருட்டு
கொன்றதுபோய்
நல்லுறவும் வந்த
நயப்பு! (7)
நெருநல் வரைநீ
நிதமும் அடைந்த
வெருவல் தனித்தா
விலகும்? – புருவப்
பெருவில் அணங்கின்
மருவில்
எனைக்கண்(டு)
உருவில் அனங்கன்
உடன்! (8)
பதமெடுத்து நெஞ்சம்
படபடக்கப் பாவை
முதலிரவில் உன்முன்
முகிழ்ந்தால்? – இதமுடன்
தொட்டமர்த்தித் தோகை
துடியிடை மீதொருகை
இட்டமர்த்திக் காண்பேன்
இதம்! (9)
மென்முறைக்கே ஒக்கல்
ஒடியுமெனில் வேட்கையினால்
வன்முறைக்கோ நீயங்கு
வித்திடுவாய்? – நன்முறையே
அவ்விரண்டும் கட்டில்
அமர்க்களத்தில்
என்றவளின்
செவ்விதழே செப்பும்
சிலிர்த்து! (10)
தாள்விழும் காரிகையைத்
தாங்கிப் பிடித்துஅவள்
தோள்விழத் தானோ
துடிதுடிப்பாய்? – மூள்கின்ற
மோக நெருப்பணைக்க
முன்வரும்
நேரிழையாள்
தாகத் தவிப்படக்கத்
தான்! (11)
பொசுக்கென்(று) அணைக்கப்
புகுவாயேல் தோகை
விசுக்கென்(று) அகலாளோ
விள்ளாய்? – விசும்பா(து)
அகல்வாளை வாரி
அணைக்க இசைவாள்
நிகழஉள்ள இன்பம்
நினைந்து! (12)
பூவைக் குரலெடுத்துப்
பூவைக்
குழல்முடிந்த
பூவை பொறென்றால்
பொறுப்பாயோ? – கோவையிதழ்
வாயோடு வாய்வைத்து
வாங்க வழங்குவாள்
தீயோடும் நெஞ்சம்
தெரிந்து! (13)
மச்சம் சிவந்தாளின்
மஞ்சள் முகத்தாளின்
கச்சம் களையக்
கருதுவதேன்? – அச்சடித்த
உச்சி நிலாத்தன்
உருவை இரண்டாக்கிக்
கச்சையிலா வைகுதெனக்
கண்டு! (14)
தலையணை ஆங்கே
தனிக்கிடக்கப் பாவை
முலையணை மீதோஉன்
மோகம்? - நிலையணை
ஈதெனக் கண்டேன்;
இன்பம் பயத்தலால்
தோதெனக் கொள்வேன்
துடித்து! (15)
கச்சில் அமைந்த
கனிமேல்
கருத்தமைத்து
மிச்சில் வடித்தல்
மிகையன்றோ? – முச்சில்
புடைத்தரிசி அட்டுதலால்
புத்தடிசில் ஆதல்
படைத்துவிடத் தானே
பசிக்கு! (16)
தட்டில் கனியிருக்கத்
தள்ளித்
தனிவைத்துக்
கட்டில் கனிமீதே
காதல்ஏன்? - மட்டில்
சுவையாவும் மங்கை
சுகந்தஉடல் தன்னில்
குவையாகி நிற்றல்
குறித்து! (17)
மங்கையின் தேன்குடமே
மையல்
தனைப்போக்கும்;
அங்கையில் பால்சொம்பும்
ஆங்கெதற்கோ? – கொங்கையின்
தேறல் தெவிட்டாது;
தீம்பால்
தெவிட்டுமதைக்
கூறல் பொருட்டெனக்
கொள்! (18)
கட்டிலில் நீயிருக்கக்
கன்னி அருகிருக்கத்
தொட்டணைக்க நாணம்
துணையாமோ? - மொட்டுவிடும்
ஆசைக்குத் தோதாக
ஆங்கு வழிவிட்டுப்
பூசைக்கும் தூதாகும்
போய்! (19)
விரகம் ஒருபக்கம்
வெட்கமொரு பக்கம்
கரகம் எடுத்தாடக்
கண்டால்? – விரகத்தால்
வெட்கம் வகிர்ந்து
விடியும் வரைஅவளின்
உட்குச் செகுப்பேன்
உவந்து! (20)
கால்நிலா நெற்றி,முக்
கால்நிலா கன்ன(ம்),முகம்
பால்நிலா என்றே
பகர்வாயோ? - தால்நில்லா(து)
அங்கவளின் அங்க
அழகை வருணிக்க
இங்குவந்து வாய்த்த(து)
எனக்கு! (21)
பாய்ச்சல்காட் டாதுபோய்ப்
பண்பாய் மிகுவிரகக்
காய்ச்சல் தணிக்கக்
கடவாயோ? - மேய்ச்சலுக்கு
நன்னிலம் கிட்டின்
நனிமேயும்
பெற்றம்போல்
என்னிலையும் ஆதல்
இயல்பு! (22)
ஆய கலைஅனைத்தும்
அத்துப் படிதானோ?
ஏயமறக் கற்ற(து)
எவளிடமோ? – நேயனே!
ஆய கலைகளுள்
ஆலிங் கனமுமொன்றே;
ஆயவில்லை அஃதுள்
அமிழ்ந்து! (23)
கல்லாக் கலவியைநீ
கற்றவன்போல்
கற்பிக்க
நல்லாளை நாடும்
நயம்நவில்! –
இல்லாள்
துணைகொண்டே கற்கத்
துணிதல் மரபாம்;
இணைகண்டே இன்புறுதல்
ஏற்பு! (24)
கூடல் பொழுதில்
கொடியிடை மீதேஉன்
தேடல் எதுவோ?
தெரிந்துசொல்! –
ஏடல்
எதுவான போதும்
இருவர்க்கும்
இன்பம்
பொதுவாதல் ஒன்றே
புகழ்! (25)
இனம்காணா இன்பம்
இருமடங்கு ஆதல்
மனத்துணர்ந்து மாது
மருண்டால்? – தனம்கொண்ட
கோதை அவளுக்குக்
கூறுவேன், மன்மதன்
வாதைக்(கு) அதுவே
மருந்து! (26)
இட்டவளை இற்றுவிழ
நின்கையால்
மெட்டிப்பெற்(று)
இட்டவளைக் கேள்!என்றால்
என்கேட்பாய்? – மொட்டவளைப்
பூமணைமேல் வைத்துப்
புதுத்தாலி கட்டியஇம்
மாமனைமேல் வாங்கென்பேன்
வந்து! (27)
மழலை மொழிபேசும்
மங்கை அவட்கோர்
மழலை வழங்க
மனமோ? – மழலைச்சொல்
கேட்டல் செவிக்கின்பம்
தீண்டல்
உடற்கின்பம்
வேட்டல் இலார்யார்?
விளம்பு! (28)
நூலிடை என்றே
நுவலரிய நுண்ணிடை
சாலிடை ஆவதில்
சம்மதமோ? – நூலுடை
கொண்டு மறைத்தமு(து)
ஊட்ட மழலைபெறல்
பெண்ணாய்ப் பிறந்தோர்க்குப்
பேறு! (29)
பதினாறும் பெற்றுப்
பெருவாழ்வு வாழ்க!
மதிவதன கோதைமண
வாளா! - அதிகமெனை
வாழ்த்திமன தார
வழியனுப்பும் நீயுமென்போல்
வாழ்க!துணை தேடி
மகிழ்ந்து! (30)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக