இரண்டாம் கருவறை!
அரியானா மாநிலம் குருஷேத்திரம் அருகே
அல்கேரி எனும் சிற்றூரில்
‘60’ அடி ஆடிநதுளைக் கிணற்றில் ஐந்தகவை
சிறுவன் ‘பிரின்ஸ்’ விழுந்துவிட்டான்.
21.7.2007 -செய்தி-
தோண்டிய துளைக்குள்ளே
தடுக்கி விழுந்ததினால்
உடலசைக்க முடியாமல்
ஒருக்கணித்துக் கிடக்கின்றேன்!
கண்திறந்த பின்னாலும்
கருவறைக்குள் புகுந்தேனா?
கண்மூடும் முன்னாலே
கல்லறைக்குள் விழுந்தேனா?
தண்ணீர் பெறவேண்டித்
தோண்டிய துளையா?
பூமிக்கெனை உணவாக்கப்
போட்ட இலையா?
தூக்கிட்டு நான்தொங்கத்
தொடுத்த கயிறா?
தாயான தரைமகளின்
தளிர்க்கொடி வயிறா?
என்னை ஈன்றுதரும்
இரண்டாம் கருவறையா?
இப்படியே எனைமூட
எழுப்பிய கல்லறையா?
தோண்டியது துளைதானா?
தொப்பூழ் கொடிதானா?
மண்ம(ல)டி பெற்றெடுக்க
மறுபடியும் பிறப்பேனா?
ஆழ்துளை இட்டவரே!
ஆழ்துளை இட்டவரே!
சுகப்பிறப்பு ஆகுமுன்னு
சும்மா இருப்பீரா?
மண்ணின் அடிவயிற்றை
மண்வெட்டி யால்கிழித்து
அறுவை செய்தேனும்
அகழ்ந்தென்னை எடுப்பீரா?
பெற்றெடுத்துப் பேரிட்டுப்
பெரிதுவந்த பெற்றோரே!
உம்மடிகள் கனக்குதுன்னு
மண்மடியில் இறக்கிவிட்டீர்!
மண்மடியும் கனக்குதுன்னு
மடியிறக்கி விட்டதினால்
மரணத்தின் மடியில்நான்
மயங்கிக் கிடக்கின்றேன்!
இருளென்னைச் சூழ்ந்திருக்க
இருவிழியும் இருள்கிறதே...
காலனின் கயிறெனக்குக்
கண்முன்னே தெரிகிறதே...
கயிறோடு உணவைக்
கட்டி விடுவதுயார்?
போகுமென் உயிர்மீட்கப்
போராடும் குழுவினரா?
உணவும் தண்ணீரும்
உண்ணக் கொடுப்பவரே!
நெஞ்சுரத்தைக் கொஞ்சம்
நூல்கட்டி அனுப்புங்களேன்!?
உயிர்மூச்சு முட்டுவதால்...
உதிரம் உறைவதனால்...
உயிரை உண்டல்லோ
உயிரும் வாழ்கின்றேன்!
பிணத்தைக் குளிப்பாட்டிப்
பின்தானே குழியிடுவர்?
குழிவிழுந்த பின்னாலே
குளிக்கின்றேன் வியர்வையிலே...
நிலத்தடிநீர் குறைவதனால்
நாட்டில் பலரழ
ஆழ்துளைநீர் கூடுவதால்
அழுகின்றேன் நானிங்கே...
அழுகின்ற கண்ணீரால்
ஆழ்கிணறு நிறம்பிடுதே!
அள்ளிக் குடித்தாலும்
ஆழ்துளைநீர் குறையலையே!
பள்ளத்தில் இடம்கொடுத்துப்
பரிகசிக்கும் தரைமகளே!
உள்ளத்தில் இடம்கொடுத்து
உயிரோடு விட்டுவிடு!
தண்ணீரில் கண்டமென்றால்
தரையில் ஒதுங்கிடலாம்
தரையே கண்டமென்றால்
தள்ளியெங்கு நான்போக?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக