ஞாயிறு, 25 அக்டோபர், 2026

ஆக்கப் பொறுத்த மனம்!

 

ஆக்கப் பொறுத்த மனம்!

 

ஓர் ஏதிலி சிறுவனின் ஏக்கப் புலம்பல்கள்...

 

எங்குற்றாய் தாயே!

எங்குற்றாய்? என்னை

இங்குற்ற தொட்டியிட்டு

எங்குற்றாய் நீயே?

 

பொன்தட்டில் நெய்ச்சோறும்...

பருகப் பழச்சாறும்...

விண்கட்டில் மீதேறி

விளையாட வெண்ணிலவும்...

 

பட்டோடு துணிவகையும்...

பலநிறத்தில் அணிமணியும்...

கேட்டேனோ? அழுதேனோ?

கத்திஉயிர் எடுத்தேனோ?

 

தப்பாய்ப் பிறந்தேனோ?

தவறேதும் செய்தேனோ?

அப்பன் யாரென்று

அடம்பிடித்து அழுதேனோ?

 

குப்பைத் தொட்டியென்

தொட்டில் ஆனதுவே!

இப்போது அன்னைமடி

கனவாகிப் போனதுவே!

 

‘ஆ’வொன்று கன்றுக்கு

அமுதூட்டி விளையாட

‘கோ’வென்று மனமழுகும்...

கண்ணீரும் சேர்ந்தழுகும்...

 

திருவோடு கையோடு

சாண்வயிறு பசியோடு

தெருவோடு எனைக்கண்டால்

ஊர்வாசல் அடைத்துவிடும்

 

நாயீன்ற குட்டிக்கும்

நாலுவீட்டில் சோறுண்டு;

நீபெற்ற சேயெனக்கு

நாதியென்று யாருண்டு?

 

பத்தினிப் பெண்மைநீ...

பனிமலரின் மென்மைநீ...

பட்டினி கிடக்கையிலும்

பார்க்கவராத் தெய்வம்நீ...

 

தூக்கம் விழிசேராத்

தூரத்தில் தொலைந்ததடி!

ஏக்கம் என்னுள்ளே

எரிமலையாய்க் கனலுதடி!

 

ஓடி நானொளிய...

ஒளிந்தயெனை நீதேட...

பாடி நீயழைக்கப்

பறந்துவந்து நான்சேர...

 

கொத்தும் கிளிபிடிக்கக்

கோபத்தில் அதுகடிக்கக்

கத்தி நானழுக...

உன்கண்ணில் நீரொழுக...

 

மணக்கும் பன்னீரில்

மணிக்கணக்கில் நீராட்டிச்

சுணக்கம் ஏதுமின்றித்

தூயவள்நீ பார்த்திருக்க...

 

விளையாட நான்செல்வேன்

உணவூட்ட நீயழைப்பாய்

களிசேர்க்கும் இவையனைத்தும்

கனவுகளின் ஏக்கங்கள்.

 

இளமைக் காலங்கள்

இருந்தும் என்னுள்ளே

வளமை சேர்ப்பிக்க

வருங்காலம் வருவாயோ?

 

இருக்கும் வேளையிலே

இடைவெளி வளர்ப்பவளே!

இறக்கும் பொழுதேனும்

இருந்தென்னைப் புதைப்பாயோ?

 

ஆக்கப் பொறுத்தமனம்

ஆரப் பொறுத்திருக்கும்

தீய்க்கும் நினைவுகளோ

தின்றென்னை முடித்திருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக