இருப்பை மறந்து
பொருப்பைத் துறந்து
இருந்தென்ன இறந்தென்ன நீயும்? - நம்
இனமே இதனால் தேயும்!
குருக்க மறந்து
கொழுந்தை இழந்து
கொடிகள் எங்ஙனம் வாழும்? - மிகக்
குறுகிக் கருகித் தாழும்!
ஆற்று உரிமை
அற்றோம்; காவிரி
அடிசுடும் பாலை ஆச்சு - அதன்
அணலில் கருகுது மூச்சு!
காற்றில் கடும்விசம்
கலக்குது ஸ்டெர்லைட்
காயம் மிகக்கெட லாச்சு - அதன்
காரணம் உயிர்கள் போச்சு!
மீத்தேன் என்னும்
சாத்தான் நம்மை
மிரட்டி நிற்குதே அங்கு - நமைப்
புரட்டிப் போடுதே இங்கு!
நேத்து முளைத்த
நியூட்ரினோ வந்து
நீட்டி முழங்குதே சங்கு! - நம்
நிம்மதி போச்சே இங்கு!
சாகர் மாலா
சாகடிக் காமல்
சனங்களை விடாது போல - அந்தச்
சனியனின் தொல்லைகள் நீள...
ஏக போகமாய்
எடுத்துக் கொண்டவன்
எங்கள் நிலத்தை ஆள - நாம்
எங்ஙனம் நாட்டில் வாழ?
அழிவுத் திட்டங்கள்
அனைத்தும் எங்கள்
அன்னை நிலத்தைச் சூழ - அதை
அதட்டிக் கேட்பவர் வீழ...
கழிவுக் கூடமாய்க்
கார்பரேட் டுகளின்
காலில் கிடந்து தாழ - எம்நிலம்
காலமும் விசச்சேற்றில் ஆழ...!
நீட்டொன்று வந்து
நிம்மதி கெடுக்க
நேரிழை ஒருத்தி மாள - அதில்
நித்தமும் களப்போர் மூள...!
ஓட்டொன்று போட்டோம்
ஓட்டாண்டி ஆனோம்
உதவாக் கரைகள் ஆள - நமக்கு
ஒருவழி உண்டா மீள?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக