பெற்றேனே துன்பம் பெரிது!
ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை
24 ஆண்டுகள் வீட்டுப் பாதாள சிறையில் வைத்து அவள் 7 குழந்தைகளுக்குத் தாயாகக்
காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்.
செய்தி
எலிசபெத்தின் நிலையிலிருந்து
எழுதப்பட்டது.
காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்
சாமப் பொழுதுகளில் சீரழிந்து – ஊமையாய்
இன்றளவும் வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?
தொட்டில் உறவைத் துளிர்த்துவரும்
காமத்தால்
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் –
இட்டமில்லாத்
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்
என்றனுக்கு இந்தநிலை ஏன்?
கட்டிப் பிடித்தான் கனிஇதழை மென்றிட்டான்
தொட்டுக் களித்தான் துடியிடையை – எட்டிப்
படுத்தாலும் பாழ்செய்தான் பக்கமிருந்து
இன்பம்
கொடுத்தாலும் செய்தான் கொலை!
அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு துடித்தேன் – உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய்
மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!
சொட்டுத்தேன் என்னைச் சுவைத்து
முடித்ததுகாண்
கொட்டும்தேள் அய்யோ கொடுமையிது –
கட்டிப்பொன்
தீக்கிடையில் வீழின் திருநகையாம்
உண்டோசொல்
சாக்கடையில் வீழின் தகவு?
அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கிழத்தி
என்னுமிழுக்கு ஏற்பட்டது என்னாலே –
என்விதி
ஏட்டிலே காணா எழுத்தாச்சே என்கதை
நாட்டிலே காணா நடப்பு!
வெங்கானம் தான்ஏகி வெந்து தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ –
பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!
அன்பைப் பொழிந்துநிதம் அன்னையவள்
மஞ்சத்தில்
தன்னை வருத்தித் தவம்கிடந்து – முன்னம்
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவனே கற்பைக்
கெடுத்தான் அருகில் கிடந்து!
தான்பெற்ற பெண்ணென்னைத் தாரமென்று
எண்ணிஎன்
ஊன்மீதே மோகவெறி உற்றவனை – யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப
விழைந்திடுமே
தாய்வழிப் பாட்டனைத் தான்!
அப்பனை ஆசையாய் ஆளன் எனஅழைக்க
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் –
அப்படியே
கற்பனையும் காணக் கடவுவதோ அய்யோநான்
முற்பிறப்பில் செய்தவினை யோ?
உறவை மறந்தான் உறுப்பரிப்பு உள்ளான்
புறம்போக்கு நாளும் புணர்ந்தான் –
இறைவாசொல்
பூமெத்தை மீது புணர்ந்து சுகம்காணும்
காமத்தை ஏன்வைத்தாய் கண்டு?
கூன்படைத்த நெஞ்சக் கொடியோன் குடிசையிலே
என்படைத்தாய் என்னை இடர்படவா – ஊன்படைத்த
பெண்ணாய்ப் பிறப்பதினும் பேயாய்ப்
பிறப்பதுமேல்
மண்ணாய் மிதிபடினும் மாண்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக