வியாழன், 22 அக்டோபர், 2026

பூங்கா!

 

பூங்கா!

 

நகரத் திரையே

சுவர்க்கம் போலே

நகரத் திடையே பூங்காக்கள் – அதில்

சிரிக்கும் பூக்களைத்

திருடா திருக்கத்

திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்

 

சின்னப் பூக்கள்

சிரிக்கும் அழகில்

சிந்தும் தேனின் சுவைகண்டு – மிக‍க்

கன்னம் வைத்துக்

கவின்மலர்த் தேனைக்

கவர்ந்து போகுது பொன்வண்டு

 

திங்கள் தவழும்

தென்றல் உலவும்

சிவந்த மாலைப் பொழுதினிலே – மணம்

தங்கள் பூங்கா

தன்னைச் சார்ந்து

தங்கிக் களிப்பார் தனிமையிலே

 

விரித்த பாய்போல்

விளங்கும் பாதை

விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் – அதில்

இருக்கும் மனம்விடுத்து

இடையிடை மறைவில்

இருக்கும் வகையால் உளம்களிக்கும்

 

அமைதி தேடி

அலையும் கூட்டம்

அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது – அதில்

அமைதி தேட

அமைத்த பூங்கா

அமைதி இழந்து தவிக்கிறது

 

மாலை வந்தால்

மக்கள் வந்து

மலிவார் அமைதி பறிபோகும் – சிலர்

மாலை வந்தால்

மனத்துயர் விடுத்து

மறுபடிக் கிளம்ப இரவாகும்

 

பின்னல் தலையில்

பிஞ்சுப் பூக்கள்

பிறங்கப் பூங்கா சிரிக்கிறது – கவின்

புன்னகை சிந்தும்

பூக்களை மெல்லப்

பூவிரல் நாடிப் பறிக்கிறது

 

சிரித்து மகிழ்ந்து

சிலபொழு திருந்து

செல்லவே சிலபேர் வருகின்றார் – உளம்

வருத்தும் நினைவின்

வளர்முளை கிள்ளி

மறக்கச் சிலபேர் வருகின்றார்

 

போகாப் பொழுதைப்

போக்கித் தொலைக்கப்

பூங்கா சேரும் சிலருண்டு – உடல்

வாகாய் விளங்க

வடிநற் காற்று

வாங்க வருவார் சிலருண்டு!

 

முந்தியை விரித்து

மூலையில் படுத்து

மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் – அட

குந்திய இடத்தில்

கொஞ்சிக் குலவிக்

குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

 

ஒவ்வொரு மரமும்

ஒவ்வொரு கல்லென

உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் – அதில்

அவ்வவர் துணையொடு

அண்டிக் களித்து

அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

 

கொணர்ந்த பொருளைக்

குதப்பித் தின்று

குப்பை ஆக்கச் சிலர்வருவார் – மலர்

மணக்கும் பூங்கா

மணத்தைக் குளைக்க

வாயில் புகையொடு சிலர்வருவார்!

 

நகைக்கும் பூங்கா

நாடி மகிழ்ந்து

நடையைக் கட்டல் பீடாகும் – சுருள்

புகைக்கும் அரங்கெனப்

புகைத்தால் பூங்கா

புகழ்தனை இழந்து காடாகும்!

 

விழுப்ப மெல்லாம்

விளங்கும் ஒழுக்கம்

வீரிட் டழுவுது பூங்காவில் – இந்த

ஒழுக்கக் குறைகள்

ஒழிந்து விழுப்பம்

உயர்ந்து விளங்க யார்காவல்?

 

சீருடை அணிந்த

சிறார்கள் போலே

சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது – பெரும்

பேருடை தன்னின்

பெரும்புகழ் குறைத்தல்

பிழையெனச் சாடி முடிக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக