ஞாயிறு, 27 ஜூலை, 2008

திசைமாறிய பறவைகள்!

நீகுடித்த எச்சில்பால்
நான்குடித்து வளர்ந்ததாலா
நான்புசித்த மீதத்தில்
நீபசி ஆறிவந்தாய்?

ஒட்டிப் பிறந்தவர்போல்
உன்நிழலில் நான்நடக்க...
எட்டிப் பிரியாமல்
என்னளவில் நீபழக...

அண்ணன் தம்பிக்குள்
அழியாத நட்பொன்று
அரும்பாய்ப் பூத்துவர
அதிசயிக்கும் ஊர்கண்டு!

பாட்டில் நயமொளிக்கும்
பண்பெனவே நீயொளிய...
பூப்பூவாய்த் தேன்தேடும்
பொன்வண்டாய் நான்தேட...

ஓடி விளையாடி
ஒருவாறு ஓய்ந்தபின்னே...
ஆடித் தடுமாறி
வீடுவந்து சேர்ந்தபின்னே...

அடிவயிற்றுப் பசியாற
அன்னம் இடுபவளின்
மடியோடு நானமர...
மண்ணோடு நீயமர...

என்ன நினைத்திருப்பாய்?
ஏன்பிறந்தான் என்றிருப்பாய்!
உன்னுரிமை நான்கொள்ள
ஓரவிழி வேர்த்திருப்பாய்!

சிறுவயதில் நமக்குள்ளே
சுயநலங்கள் இருந்ததில்லை...!
சிறகுகளை விரித்தாலும்
திசைமாறிப் பறந்ததில்லை...!

பருவம் போனதினால்...
பாழுலகம் புரிந்ததினால்...
திருவில்லாத் தன்னலங்கள்
சிந்தைக்குள் புகுந்ததினால்...

சொத்தைப் பிரித்துவிட்டோம்!
சுமந்தவரை பிரிந்துவிட்டோம்!
பத்தோடு பதினொன்றாய்ப்
பார்ப்பவருக் காகிவிட்டோம்!

தனக்கென்று சிறகுகள்
தனித்தனியாய் ஆனதினால்
திசைமாறிப் பறந்துவிட்டோம்!
திரும்பிவர மறந்துவிட்டோம்!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

 1. திரும்பி வர மறக்கவில்லை, பிரிவிது தற்காலிகமே என்று எண்ணிக் கொள்.

  பதிலளிநீக்கு
 2. அப்படியே ஆகட்டும் ஒளியவன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

  விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

  விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

  உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


  ஒன்றுபடுவோம்
  போராடுவோம்
  தியாகம் செய்வோம்

  இறுதி வெற்றி நமதே


  மனிதம் காப்போம்
  மானுடம் காப்போம்.

  இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  பதிலளிநீக்கு