ஞாயிறு, 25 அக்டோபர், 2026

வட்டநிலாச் சுட்டவடு!

 

வட்டநிலாச் சுட்டவடு!

சிங்கை கவிச்சோலைக் கவியரங்கில் பரிசு பெற்ற கவிதை...

 

தென்றல்போல் என்சிந்தை

தீண்ட விழைகிறாள் - வண்ண

மின்னல்போல் விழிவிழுந்(து)

ஏனோ ஒளிகிறாள்!

 

பூமயங்கும் பூவிழிகள்

பேசு கின்றன - அதில்

பூமணமும் பாமணமும்

வீசு கின்றன!

 

பூங்காந்தள் விழிசொல்வது

என்ன மந்திரம் - என்னை

ஏகாந்தம் சூழ்ந்துகொள்ள

என்னக் காரணம்?

 

தென்றலெனத் தேடிவந்து

தீண்டும் நினைவுகள் - அது

கொண்டவுயிர் கொண்டுபோகும்

காலன் கயிறுகள்!

 

கண்ணயர்ந்து தூங்கையிலும்

கவிதை சொல்கிறேன் - நாளும்

உண்ணஅமர்ந்து உண்ணாமல்

எழுந்து கொள்கிறேன்!

 

சிந்தையுற்ற அன்னையெனைச்

சினந்து கொள்கிறாள் - கையில்

மந்திரித்த கயிறெடுத்துக்

கட்டி விடுகிறாள்!

 

மணிக்கட்டில் கயிறுஉறுத்த

வெட்டி எறிகிறேன் - அவள்

பொன்கூந்தல் குழலெடுத்துக்

கட்டிக் கொள்கிறேன்!

 

சிந்தையெலாம் நிறைந்தநிலா

தொலைந்து போனதே - இன்று

அந்தநிலா இன்னொருவன்

சொந்த மானதே!

 

வட்டநிலாச் சுட்டவடு

மறந்து பார்க்கிறேன் -அது

முடியவில்லை என்றபோது

இறந்து பார்க்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக