துன்பத் தீர்ப்பு!
திருச்சி ஸ்ரீரங்கத் திருமண மண்டபத்
தீவிபத்தில் மணப்பெண் சுபஸ்ரீயின்
நிலையிலிருந்து எழுதியது...
திருமணம் என்னும் தேரில் ஏறுமுன்
தீக்குழி மூழ்கிய நிலவுயிவள்...
நறுமணம் வீசுமுன் நாராய்க் கிழிந்த
நிமலன் தோட்டத்து மலருமிவள்...
செண்டுகள் சூடிய பெண்டிவள் வாழ்வும்
சதுரங்க மேடை ஆகியதே!
அன்றொடு தலைவன் தலைதகர்ந்து ஏகினும்
சதுரங்க ஆட்டம் தொடர்கிறதே!
விழியில் தீட்டிய மையின் அளவோ
மேக மந்தையின் ஒருபாதி!
விழிகள் ஊற்றிய கண்ணீர் மட்டும்
சிரபுஞ்சி மழையில் சரிபாதி!
ஜதிகள் போடும் சலங்கை சோகச்
சாசனம் எழுதி வாசிக்கும்!
திதியும் வைப்பதோ திருமண நாளில்
இந்நிலை வேண்டாம் வேசிக்கும்!
சதியே செய்யும் விதியே! இவளைச்
சந்தித்த வேளை சரிதானா?
விதியைத் தலையில் எழுதிய இறைவன்
விதிக்குத் தப்பித் திருப்பானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக