சாவு எங்க வீட்டச் சுத்தி
வட்டம் போடுது - எங்கள
சாகடிக்க நேரம் பாத்துச்
சத்தம் போடுது!
காப்பர் ஆல கூட சேந்து
திட்டம் போடுது - எங்கள
கேன்சரால கொன்னுபோட
நித்தம் தேடுது!
கடவுள்போலத் தெரிஞ்ச ஆல
காலனாகுது - விஷத்த
காத்தில் நிலத்தில் நீரில் விதச்சிக்
கால வாருது!
நம்பித் தாங்க அனுமதிச்சோம்
நஞ்ச ஊட்டுது - எங்கள
நாளும் பொழுதும் புதைகுழிக்கு
நடிச்சி ஓட்டுது!
உண்ணும் உணவு பருகும் நீரு
கெட்டுப் போச்சுது - எங்க
உதிரத்தோட உயிர்க் கொல்லிகளை
விட்டுப் போச்சுது!
வேலை தந்து கூலி தந்து
ஆசை கூட்டுது - பிறகு
விஷத்தைத் தந்து நோயைத் தந்து
சாவைக் காட்டுது!
தினமுமிங்கே சாவில்லாத
வீடு இல்லைங்க - அந்த
தினவெடுத்த ஆலையால
ரொம்பத் தொல்லைங்க!
வெறுத்துப் போச்சு இந்த வாழ்க்கை
வேதனை மிச்சம் - இனியும்
பொறுத்துப்போனா மண்ணில் தங்காது
எங்களின் எச்சம்!
அடிச்சி விரட்டு ஸ்டெர்லைட் டாலப்
பட்டது போதும் - மக்கள்
நொடிக்குநொடி நோயில்வீழ்ந்து
செத்தது போதும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக