வியாழன், 22 அக்டோபர், 2026

 காலைமணி பத்திருக்கும்

கம்பன் துயில்கலைந்தான்
சோலை இருள்நீக்கும்
சூரியன்போல்... - காலைக்
கடன்முடிக்க எத்தனிக்கக்
கத்திய'கை பேசி'
உடனெடுத்தான் ஐயத்
துடன்!
எதிர்முனையில் யோரோ
இசையமைப் பாளன்
அதிமென் குரலில்
அழைத்தான் - "புதியதோர்
பாடல் இசைசமைப்போம்
பாடெ"னுமுன் பாடினான்
தேடல்யா தென்று
தெரிந்து!
இம்மெனும் முன்காள
மேகம் இயம்பியதை
அம்மெனும் முன்னே
அருளியதை - உம்மெனுமுன்
பாடல் விளம்பியதைப்
பார்த்ததார்? யான்பார்த்தேன்
மாடத்தே நாகையில்
வைத்து!
சொல்லுகிறான் கம்பன்;
சுதிபிடிக்க மாட்டா வாய்
மெல்லுகிறான் அவ்விசை
மேதை தன் - வல்விரலால்
மீட்டுகிறான் கின்னரத்தை;
மீட்டியதை மாற்றிப்பின்
கூட்டுகிறான் வேறோர்
குறிப்பு!
கின்னரம் - கின்னரப்பெட்டி (பியானோ).
நகைவண்டி ஓட்டுகிற
நம்கம்பன் காற்றில்
புகைவண்டி ஓட்டுகிற
போதே - தொகைவண்டி
ஓட்டிவரும் சந்தப்பா
ஓசை பிடிப்பதற்குள்
வாட்டுகிறான் போட்டே
வரி!
எதைத்தான் எடுக்க?
எதைவிடுக்க என்றே
பதைத்தான் இசைஅமைக்கும்
பாணன்; - அதைத்தான்இந்
நாரத நல்லமுதன்
நாரதம் ஏற்றியே
பூரண மாயுடைத்தேன்
போட்டு!
குறிப்பொன்றும் சொல்லாமல்
குத்து மதிப்பாய்ப்
பொறிப்பதேன் வெண்பாவென்
போர்க்காய் - அறிவிப்பேன்
யான்பெற்ற அண்ணனவன்
யார்யார்க்கும் அன்பனவன்
தான்சின்னக் கண்ணதா
சன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக