நம் நட்பே சாட்சி!
கல்லூரி வாழ்விலின்று கடைசி நாளாம் - பல
கலைகளையும் நாம்கற்றுத் தேர்ந்த நாளாம்!
கல்வியொடு பலகதைகள் கதைத்த நாட்கள் - இனி
கனவோடு சிறகடிக்கக் கனிந்த நாளாம்!
இல்லறத்தைக் கண்டபின்பும் பிரிவ தில்லை - ஆண்கள்
இருவரிடை நட்பிலெந்த இழப்பு மில்லை!
இல்லறத்தைக் காண்பதற்குப் பிரிந்து போகும்
- பெண்கள்
இருவரிடை நட்புமட்டும் பிரிந்தும் வாழும்!
சோழனொடு பிசிராந்தைத் தூய நட்பை - உண்மைத்
தோழர்களின் நட்பினுக்கே உவமை சொல்வர்!
சேயிழையாம் ஒளவையொடு அதிய மானை - ஆண்பெண்
தோழமைக்கே ஓருவமை யாகக் கொள்வர்!
தோழமையாய் இருபெண்டிர் பழகிக் கொள்ள - உண்மை
உவமானம் கண்டுசொன்ன கவிஞர் உண்டா?
தோழியே!நம் நட்பொன்றே அதற்குச் சாட்சி - பெண்கள்
தோழமைக்கே உவமானம் நாமே என்பேன்!
அண்ணனொடு தம்பியர்க்குப் பெயரு மிட்டால் -
அக்பர்
அலி,ராபர்ட், அமுதனென்று அமைவ
தில்லை!
அண்ணனொடு தம்பியர்க்குள் இரண்டு சாதி - என்றும்
அமைவதற்கும் சாத்தியங்கள் இருப்ப தில்லை!
கண்மணியே! வென்றுவரும் காதல் கூட - ஒரு
சாதியுள்ளே காதலென்றால் வெற்றி கொள்ளும்!
பெண்மகளே! நட்புடனே பழகிக் கொள்ள - நட்பு
சாதிமத பேதமென்றும் பார்ப்ப தில்லை!
ஈன்றுபுறந் தள்ளியவள் பாச மெல்லாம் - பிள்ளை
இருபத்தைத் தொட்டவுடன் தீர்ந்து போகும்!
மூண்டெழுந்த காதலிலே மனந்தி ளைக்கும் - காதல்
மூன்றுமுடி இட்டவுடன் முடிந்து போகும்!
தோன்றுகின்ற காமமதைத் தொடரச் செய்தால் - அது
தொன்னூறு நாள்முடியத் தொலைந்து போகும்!
மான்விழியே! நம்மிடையே மலர்ந்த நட்பு - உயிர்
மண்ணுலகை விட்டபின்னும் மணம்ப ரப்பும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக