எனக்குள் அவள்!
அம்மாவுக்கு என்மேலே
அன்புதான்; ஆனாலும்
அப்பாவின் பாசத்திற்கு
அளவில்லை என்றாலும்
ஒட்டாரம் நான்செஞ்சால்
ஒன்றிரண்டு உதைகிடைக்கும்
அப்பெல்லாம் அவள்கைதான்
அன்பாக அரவணைக்கும்
அவள்மட்டும் தான்என்னைக்
கைநீட்டி அடிச்சதில்லை
அவளிருக்கும் வரையில்நான்
கண்ணீர் வடிச்சதில்லை
அக்குளில் விரல்விட்டுச்
சிரிப்புமூட்டி விடுவாள்
தொப்புளில் முகம்புதைச்சிக்
கிளுகிளுப்பைத் தருவாள்
சுகமெனக்கு இல்லைன்னா
சுக்குமிளகு இடிப்பாள்
விரைவில்நான் நலமாக
விரதங்கள் இருப்பாள்
கிள்ளாமல் கன்னத்தைக்
கிள்ளிநெட்டி முறிப்பாள்
சொல்லாமல் பாசத்தைச்
சுறுக்குப்பையில் முடிப்பாள்
தின்பண்டம் வாங்கிவந்து
தின்னவச்சி ரசிப்பாள்
தித்திக்கக் கதைசொல்லிச்
செவிகளை நிறைப்பாள்
அவள்சொல்லும் கதையிலே
நான்முருகன் அவள்வள்ளி
அப்படித்தான் ஆரம்பிப்பாள்
அன்றாடம் கதைசொல்லி
கதைசொல்லும் பொழுதில்
கணநேரம் இடைவிடுவாள்
இடைவிடும் காரணத்தால்
என்கிட்ட உதைபடுவாள்
அழகில்லை ஆனாலும்
அவளெனக்கு தேவதை
மவராசி அவள்தான்னா
மறுப்பது யாரதை?
அப்படியோர் பெண்ணரசி
யாருன்னா கேட்டீங்க?
அவள்தாங்க அவள்தாங்க
என்னோட பாட்டிங்க!
வேப்பம்பூ குழம்புவச்சா
வெல்லமா இனிக்கும்
வெஞ்சனம் அரைச்சுவச்சா
வீதிவரை மணக்கும்
சத்தியமாய் அவள்பிசைந்து
தரும்பிடிச் சோறு
தொன்னையில் நெய்கணக்காய்த்
தொண்டையில் வழுக்கும்
அக்கால ஔவைக்கு
அப்பத்தாள் சளைச்சவளா?
இக்கால பரவை
முனியம்மாவுக்கு இளைச்சவளா?
தமிழெழுத்து அஃகுப்போல்
தடம்பதிப்பாள் கம்பூனி – அவள்
தயிர்கடைய எழும்இசைக்குச்
சமம்தானா சிப்போனி?
அப்பப்பா! பார்க்கத்தான்
அப்பத்தாள் அஞ்ஞானி
விவரம் பலஅறிஞ்ச
வில்லேஜி விஞ்ஞானி
நாலணா எட்டணா
நானெடுக்கும் போதிலே
வட்டிஅசல் கேட்காத
வங்கிஅவள் சுறுக்குப்பை
வேர்வைசிந்தி நான்உழைச்சுத்
தேவைக்குமேல் சேர்த்ததிலே
கோடிகோடி பணமிருந்தும்
என்பணப்பை வெறும்குப்பை
ஆத்தாள் பக்கத்தில்
முன்னிரவில் நான்தூங்கி
அப்பத்தாள் பக்கத்தில்
அதிகாலை கண்விழிச்ச
இந்த அதிசயம்
எப்படின்னு விளங்கலே
எனக்கொரு மகன்வந்து
பிறக்குற வரையிலே
ஆவளைப்போல் யாரிருக்கா
ஆறுதல் மொழிசொல்ல?
அவளிடத்தை நிறப்பஒரு
ஆளிருக்கா? விடையில்ல...
ஆயிரம்கண் கந்தைசுற்றி
மானம்காத்த அவளெங்கே?
ஃபேஷனென்ற பேரிலே
மேனிகாட்டும் பெண்ணெங்கே?
அவள்அரைச்ச அம்மி
அடுப்பங்கரை நிறைக்குமா?
அவள்இடித்த உரல்
புழக்கடையில் புழுங்குமா?
பலநோய்க்குத் தீர்வாச்சே
பாட்டி வைத்தியம்
பலர்க்கிப்போ புடிச்சிருக்கே
பார்மசி பைத்தியம்
அத்தனையும் பார்க்கும்போது
அவள்நினைப்பாய் இருக்கு
புத்திக்குள் பிடிக்குது
பொசுக்குன்னு கிறுக்கு
வெத்தலைவாய் முத்தங்கள்
வைப்பாயே அப்பத்தா!
ஒத்தமுத்தம் வேண்டுமடி
உயிர்த்தெழுந்து இப்பத்தா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக