தாலிவரம்!
திருமண முறிவு வேண்டி கணவன் நீதிமன்றம்
செல்கிறான். அந்த
இறுதிக்கட்ட நேரத்தில் அவன் மனைவி
அவனுக்கு எழுதும் கவிதை மடலாக
இக்கவிதை...
திருமணம் கசந்துவிட்ட
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வருமா?
இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்.
அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய்ச் சிரிக்குது.
பெயர்சொல்ல முத்துப்போல்
பெற்றுத்தந்தேன் வாரிசு
அடிவயிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு.
உறவுக்குள் சிலநேரம்
உயிர்பெறும் ஊடல்கள்
ஊடல்கள் தீர்ந்தாலே
உள்ளத்தின் கூடல்கள்.
ஊடல்கள் தீராமல்
கூடல்கள் நிகழாதே
ஊடல்கள் தொடர்ந்தாலோ
உறவுகள் நிலைக்காதே.
விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சொர்க்கம் இல்லையா?
முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே!
விடிவுக்கு விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே!
முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தகாசு இறைவனுக்கு...
முந்துகின்ற கண்ணீரால்
முடிகின்ற கடிதம் உமக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக