செவ்வாய், 15 ஜூலை, 2008

பேணுகிறேன் உன்னை பெரிது!

கட்டித் தயிரே! கனியூறும் தேன்சாறே!
எட்டுத் திசையாளும் இன்தமிழே! -சொட்டும்
சுவைத்தேனே! உன்னைச் சுவைத்தேனே! அள்ளி
அமைத்தேனே பாட்டில் அறி!

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்ட
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!

அடுத்தோர் பிறப்பென்றால் அங்குமுன் சேயாய்
மடிதோன்றி வாழ்வேன் வடிவே! -நொடிப்போழ்தும்
என்னைநீ நீங்கினால் இன்னுயிர் நீத்திடுவேன்
பொன்னே! தமிழே! புரி!

உச்சி முகர்ந்தெனக் கோரா யிரமாய்நல்
இச்சுத்தா தாயே! இசைத்தமிழே! இச்சகத்தை
ஆளப் பிறந்தவுன்னை ஆளத் துணிந்திட்டேன்
கோளெனவும் கொண்டேன் குறி!

அமுதெனவே ஆனவளே! அன்னாய்!உன் சேய்நான்
அமுதன் எனும்பேர்கொண் டார்த்தேன்! -குமுகாயம்
காணயெனைக் கையோடு கூட்டிப்போய்க் காட்டம்மா!
பேணுகிறேன் உன்னை பெரிது!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

  1. அமுதா! வாழ்த்துக்கள். முதல் பரிசில் வியப்பு ஏதும் இல்லை. உங்கள் புலமைக்கு நீங்கள் அடுத்த முறையிலிருந்து நடுவராக வேண்டும்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அனுஜன்யா அவர்களே! நீங்க ஒரு வெண்பா போட்டி நடத்துங்களேன் நான் நடுவராய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. //
    சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
    பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
    ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
    பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!
    //
    நான் மிகவும் சுவைத்த வரிகள்.

    பதிலளிநீக்கு