நேர்த்தியென நிறைந்ததடா தமிழ்என் நெஞ்சில்
புல்லெடுத்துக் கூடுகட்டும் குருவி யைப்போல்
புகழ்மொழியில் அதனால்தான் பாட லுற்றேன்!
வில்லெடுத்துப் போர்புரிந்த வேந்தர் போற்றி
வியனுலகில் வளர்த்திட்ட தமிழை தேனை
அல்லொடுக்கும் ஒளிவழங்கும் பகலோன் தாயை
அமுதனிவன் அமுதெனவே பருக லுற்றேன்
அன்புமனம் வேண்டுமெனில் அன்னை போதும்;
அருங்கலைகள் கற்கவெனில் ஆசான் போதும்;
இன்பநலம் துய்க்கவெனில் இல்லாள் போதும்;
இணைபிரியா திருக்கவெனில் நண்பன் போதும்;
விண்சென்றும் புகழ்நிற்க ஈகை போதும்;
விளம்பிவிடின் இங்குரையாய் விரித்த யாவும்
ஒன்றாகி ஓருருவாய் நிற்க வேண்டின்
ஒண்டமிழ் அன்னையவள் மட்டும் பொதும்!
கொண்டபொருள் அத்தனையும் கொள்ளை போகக்
கொடுத்திடினும் சிரித்தலன்றி அழுதற் கில்லை!
தொண்டையிலே நஞ்சிறங்கத் துன்ப மெல்லாம்
தொடர்ந்திடினும் மகிழ்தலன்றித் துடித்தற் கில்லை!
மண்டையிலே இடியிறங்கி வருத்தும் போதும்
மார்தட்டி எதிர்த்தலன்றி மருள்த லில்லை!
அண்டமெலாம் ஆள்தமிழென் அகத்தை விட்டே
அகன்றுவிடின் மரித்தலன்றி உயிர்த்த லில்லை!
நன்றென்றும் தீதென்றும் பகுத்துப் பார்க்கும்
நல்லறிவைப் பெறவில்லை! மனங்கள் தோறும்
சென்றங்கு மறைந்திருக்கும் சூழ்ச்சி தன்னை
சிலநொடியில் பேச்சினிலே தெரிந்தே னில்லை!
உண்டென்று சொல்லுமிறை உணர்ந்தே னில்லை!
உழைத்துழைத்துக் களைத்திட்டேன் உயர்ந்தே னில்லை!
என்றாலும் அதுபற்றிக் கவலை யில்லை
எழிலன்னைத் தமிழென்னை இணைந்த தாலே!
அகரம்.அமுதா
நன்றாக வீசிடுது நற்றமிழ் பாவும்தான்
பதிலளிநீக்குஎன்றாலும் போதாது, அச்சச்சோ என்செய்வேன்,
ஏற்றம் அதைப்புகழ எங்கும் கிடைக்கா
மல்
சொற்களே நீங்கள் மறைந்தது எங்கே?
lol,so nice
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்குஅழகுத் தமிழில் அருமையான சொல்லாடல்கள்
பதிலளிநீக்குஅன்னைத்தமிழுக்கு அணிகலன்!
மிக்க நன்றிகள் தோழி
பதிலளிநீக்கு