சனி, 21 ஜூன், 2008

புதியதோர் உலகம்செய்வோம்!

புதியதோர் உலகம்செய்வோம் -ஆங்கே
புகவரும் மடமையைத் தடையும்செய்வோம்!

மூடப் பழக்கங்களைக் -கண்
மூடித் தனத்தொடங் கேற்பதற்கில்லை!
சாடத் தலைப்படுவோம் -பழஞ்
சாத்திரம் சடங்கினுக் கங்கிடமில்லை!

ஒற்றுமை ஓம்பிடுவோம் -அங்(கு)
ஓர்குலம் ஓர்நிரை வேற்றுமையில்லை!
குற்றமே புரிந்திடினும் -திருக்
குறள்வழி திருத்துவோம் தண்டனையில்லை!

சாதிக்குப் பிறந்தவனாய் -மிகத்
தறுக்கிடு வோர்கங் கிடமுமில்லை!
சாதிக்கப் பிறந்தவனாய் -உரை
சாற்றிடு வோர்க்கொரு தடையுமில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -பாயும்
நதிகளை இணைக்கவோர் விதியும்செய்வோம்!

பார்க்குயிர் நாடியெனத் -திகழ்
பாட்டாளி தான்முதல் வகுப்பினனாம்!
வேர்த்தவன் உடலுழைப்பில் -தன்
மேனியை வளர்ப்பவன் இழிந்தவனாம்!

ஏழைசொல் அம்பலத்தே -சென்(று)
ஏறிடும் நிகழ்வுகள் பலநடக்கும்!
கீழிவன் மேலவன்காண் -எனும்
கீழ்மைக்குத் தண்டனை மிககிடைக்கும்!

அணுகுண்டோ டாயுதங்கட் -கங்(கு)
அனுமதி யென்பது சிறிதுமில்லை!
அணுக்கத்தோ டிணைந்திருந்தே -அங்(கு)
அரசுகள் நடந்திடும் சிறுமையில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -யாவும்
பொதுவுடை மையெனும் கொள்கையும்செய்வோம்!

ஆண்பெண் இருவருக்கும் -அங்(கு)
அவசியம் உயிர்நிகர்க் கற்புநெறி!
காண்கின் மதுவிலக்கை -மிகக்
கடுமையென் றாக்கிடும் அரசறிக்கை!

இயந்திர மயமிருக்கும் -அவை
இருப்பினும் பணியிடம் பலவிருக்கும்!
வியந்திடு பொருளிருக்கும் -பண்
விளம்பிடும் வழியிலப் பார்நடக்கும்!

செந்தமிழ் அரியனையில் -ஏறிச்
சிறப்புற ஆளுமப் பாரினிலே...
எந்தமிழ் மாந்தரெல்லாம் -நாளும்
ஏறுவர் புகழெனும் தேரினிலே...!


அகரம்.அமுதா

10 கருத்துகள்:

 1. பாரதி வழியில் வீறுநடை போடுகிறது கவி.
  வெல்லட்டும் எம்மவர் புகழ்!
  எட்டட்டும் எட்டுத்திக்கும்,
  எனச் சாற்றுவோம் பறை!

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவி. எழுச்சி அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. //குற்றமே புரிந்திடினும் -திருக்
  குறள்வழி திருத்துவோம் தண்டனையில்லை!//

  அபாரமான சிந்தனை அமுதா மேடம்!

  (அப்புறம்.. நீங்கள்லாம்
  தி(கு)ட்டினதால என் ‘எதிர்பாராத திருப்பம்' கதையோட முடிவை மாத்தீட்டேன்!)

  பதிலளிநீக்கு
 4. அய்யய்யோ! பரிசல் நான் திட்டவும் இல்லை. குட்டவும் இல்லை. அந்த கதையைப் படித்தவுடன் அப்படிக்கருத்துச் சொல்லணும் என்று தோன்றிற்று அவ்வளவே. ஆயினும் எனக்கு முதல் முடிவே பிடித்திருந்தது. நம்பிக்கை தானே வாழ்க்கை!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. //எந்தமிழ் மாந்தரெல்லாம் -நாளும்
  ஏறுவர் புகழெனும் தேரினிலே...!//


  வாழ்த்துக்களுடன்....!

  பதிலளிநீக்கு
 6. ஆயில்யன் அவர்களின் வருகை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து வருக. ஆதரவு தருக.

  பதிலளிநீக்கு
 7. can you email me: mcbratz-girl@hotmail.co.uk, i have some question wanna ask you.thanks

  பதிலளிநீக்கு
 8. தனிமடல் அனுப்பியிருக்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு