வெள்ளி, 11 ஜூலை, 2008

இருபொருள் வெண்பாக்கள்!

மேகமும், கணினியும்!
பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

யானையும், நெற்றாளும்!
கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

நீரும், பாம்பும்!
கிடந்தா டியிரையும்; ஈசன் சடாம
குடத்தடையும்; முட்டையிடும்; கோணற் -படங்காட்டும்;
வட்டமிடும்; ஆகையினால் வாரிதிநீர் பாம்பின்நேர்
இட்ட முடனாய்ந் தியம்பு!

கோற்சிலம்பரும், பாவலரும்!
அடிபோ டுதலால்; அடிதோறும் நன்றாய்த்
துடிப்போடே சந்தநயம் தோன்றும் -படியாகும்
பண்பதால்; கோல்கொளும் பாங்கதால்; கோற்சிலம்பர்
பண்பாடும் பாவலர்நேர் பார்!

அகரம்.அமுதா

5 கருத்துகள்:

  1. முதலிரண்டு பாக்களும் எளிதில் புரிந்தது. கடையிரண்டும் கொஞ்சம் முக்க வேண்டியிருந்து. பாராட்டுகள். சிலேடைகள் அருமை. எளிய தமிழில் அன்றாட வாழ்வியல் கூறுகளை வெண்பாவில் வடிக்கலாமே? மேலும் என்னைப் என்னைப் போன்ற அறைகுறைகளுக்கு உதவ இந்தப் பாடல் இந்தப் பா என குறிப்புகள் தரலாமே?

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் தமிழன்! நிச்சயம் குறிப்புகள் வழங்கலாம்தான். பின்வரும் இடுகைகளிலிருந்துக் குறிப்புத்தர முற்படுகிறேன். எளிய தமிழில் அன்றாட வாழ்வியல் கூறுகளைக் கவிதையாக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். மேலும் எனது வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் இலகுதமிழில் வெண்பா எழுத பயிற்சியும் அளித்துவருகிறேன். நேரமிருப்பின் கலந்து கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  3. எல்லா சிலேடைகளும் அருமை. அதில் முக்கியமாக காலத்திற்கேற்றாற்போல் கணினி வைத்துப் பாடியது மிக அருமை நண்பா.

    பதிலளிநீக்கு