புதன், 28 மே, 2008

பனித்துளிகள்!

பனித்துளிகளே! முகில்தெளிக்கும்
பன்னீர்த் துளிகளே!
அரும்புகளின் மேனிபூத்த
அம்மைக் கட்டிகளே!

நீங்கள்
பூப்பெய்தியப் பூக்களுக்கு
பூப்பெய்யும் பூக்கள்...

இரவு சிப்பியின்
திரவ முத்துகள்...

புல்வெளிக்கு வழங்கப்படும்
போலியோ சொட்டுமருந்து...

மேக விவசாயி கண்ட
சொட்டுநீர்ப் பாசனம்...

பாமரன் வீட்டுப்
பாத்திரம் நிறைக்காத
பருவ மழை...

மண்மகள் மார்பினில்
மலைப்பால் வற்றியதால்
வான்முகில் புட்டிப்பால்
வழங்கவரும் ஏற்பாடு...

விண்வெளிச் சாலையில்
விலக்குகள் எரிந்தும்
மேக விமானங்கள்
மோதிக் கொள்வதினால்
உடைந்து விழுகின்ற
உதிரித் துண்டுகள்...

இரவு நீக்ரோவின்
வெள்ளைவண்ண வாரிசுகளே!

உங்கள் அழகினிலே
உள்ளம் பறிகொடுத்து
மங்கல மலர்களெல்லாம்
மார்பள்ளிச் சூடிடுதோ?

புற்களின் மார்பினில்
இல்லாத கொங்கைக்கு
கச்சித மானதொரு
கச்சைஏன் ஆகின்றீர்?

விண்மீன்களுக்கு நிகரான
ஊர்வலம் நடத்திட
மண்ணில் மலர்களுக்காய்
முழங்கவரும் தொண்டர்களே!

நீங்கள்...
பெற்ற வெற்றிக்குப்
பின்காணத் தோன்றாத
அரசியல் வாதிகள்போல்
அதிகாலை மறைவதேனோ?


அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. can u leave ur phone number to me???

    பதிலளிநீக்கு
  2. வருக ஃபேசன்ஜீவல்லரி! நான் தற்சமயம் சிங்கையில் இருக்கிறேன். இது என் தொலைபேசி எண் 90519846 -சிங்கப்பூருக்கான கோட் எண் என்னவென்று அறிந்து முன்னால் இட்டு அழைக்கவும். அதைவிட சிறந்தது தங்களின் எண்ணை எனக்குத் தரலாம். நான் இங்கிருந்து அழைத்தால் கட்டணம் குறைவாக இருக்கும். நன்றி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு