பெரியாரின் வழிநின்றே மூடப் போக்கை
பீரங்கிப் பேச்சதனால் எதிர்த்து வந்தார்!
சரியாய்நம் திராவிடரின் கொள்கை
கூறி தறுக்கியதோர் ஆரியப்பேய் ஓட்டி நின்றார்!
நெறியான எழுத்ததனால் நாளும் நாளும்
நேசத்தமிழ் காத்திட்டார்! கல்வி யென்ப
தறியாத மக்களையும் அவர்தம் பேச்சால்
அறிவிலுயர் பகுத்தறிவை அடையச் செய்தார்!
பேச்சென்றால் அவர்பேச்சு முகிலின் வீச்சு!
பேச்சதனைக் கேட்போர்க்குள் மின்னல் வீச்சு!
ஆச்சதனால் ஆரியர்மேல் இடிவீழ்ந் தாச்சு
அன்றுமுதல் அவர்கொட்டம் அற்றே போச்சு!
நாற்றிக்கும் நம்பெருமை நாட்ட லாச்சு!
நறுந்தமிழ் ஏடாளும் நம்மண் ணாச்சி
ஆட்சிப்பாங் காயாற்றி அகிலம் போற்ற
அருமைமிகு சாதனைகள் பலசெய் தாச்சு!
ராமகதை பாடுகின்ற மேடைக் கூத்தை
ராத்திரிகள் பலவிழித்து ரசிப்போர்க் கெல்லாம்
காமகதை அதுவென்றே கண்டு கொள்ள
கம்பரசம் தந்திட்டார்! தமிழர் மாட்சி
பூமியுள நாள்வரையும் போற்றச் செய்தே
பூந்தலைவர் துண்டலைவீழ் கடலோ ரத்தில்
ஓய்வெடுக்கப் போய்விட்டார்! போனா லென்ன?
உயர்தமிழர் நன்னெஞ்சில் வாழும் போதே!
அகரம்.அமுதா
அண்ணாவிற்கான பாடல் மிக அருமை. அவர் போனால் என்ன தமிழர்கள் நெஞ்சில் வாழும்போது என்ற வார்த்தைகள் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி ஒளி!
பதிலளிநீக்குlol,so nice
பதிலளிநீக்குநன்றிகளை உரித்தாக்குகிறேன்.
பதிலளிநீக்கு