திங்கள், 21 ஜூலை, 2008

நத்தை!

தொழிலிலை எனினும் சுமைதூக்கி!
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி!
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ்
வழிவழி போகா துள்ளபடி!

ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு!
உள்ளதன் படுக்கை அறையுண்டு!
கொற்றவன் இல்லை என்றாலும்
கோல எழில்மணி முடியுண்டு!

கடந்து போகும் இடமெல்லாம் -பொதி
கழுதை போலே சுமந்துசெல்லும்!
அடடா! அதுதான் வீடாகும்!
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்!

கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது!
பட்டுத் தெளியுமுன் பட்டறிவால்
ஐம்புலன் அடக்கும் சித்தனிது!

கொம்போ டுடலை உள்வாங்கிக்
கொடுமையி லிருந்து தப்பிக்கும்!
ஐம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்!

அகரம்.அமுதா

5 கருத்துகள்:

  1. திரும்ப திரும்ப படித்து பார்தேன் கடைசியில் தான் புரிந்தது அர்த்தம்!!!

    பதிலளிநீக்கு
  2. அருமையான வாழ்த்து! இக்கவி பாடிய உனக்கெனது வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  3. இசக்கி முத்திற்கும் ஒளியவனுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    பதிலளிநீக்கு