செவ்வாய், 23 செப்டம்பர், 2008

வான்புகழ் வள்ளுவர்!

அதி-காரம் இல்லா(து) அதிகாரம் செய்தவ்
வதிகாரத் துட்பொருள் ஆளும் -விதத்துடனே
குற்றமதில் சற்றேனும் காணொண்ணா முப்பாலே
சித்தத்திற் கேற்றநூல் செப்பு!

அறமுண்டாம்; வாழப் பொருளுண்டாம்; சேர்ந்தில்
லறங்காண இன்பமும் உண்டாம் -திறத்துடனே
நாம்குறளைக் கற்க நலமுண்டாம் பொய்யில்லை
தேம்பா திருக்குறளில் தேர்!

எப்பாலும் ஏற்கும்பால் எப்பாலென் றார்ப்பாரேல்
முப்பாலாம் என்றேநீ முன்மொழி -அப்பாலில்
செப்பாமல் வள்ளுவனார் விட்ட நெறியிலையாம்
தப்பாமல் ஊர்க்கிதை ஓது!

தமிழ்க்குடியைப் பாரறியத் தக்க வழிகண்(டு)
அமிழ்தினிய முப்பால் அளித்தார் –நமதினிய
தேன்தமிழ்ச் சொல்லெடுத்துச் செய்யுள் பலசெய்து
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து!

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

  1. //தேன்தமிழ்ச் சொல்லெடுத்துச் செய்யுள் பலசெய்து
    வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து!//
    வாழ்த்த அடியேனால் இயலவில்லை, வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி நண்பர் ஜீவா அவர்களே!

    பதிலளிநீக்கு