பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
செவ்வாய், 3 ஜூன், 2008
செல்வம்!
தழைத்த குமுதம் உடனிருந்தும்
அழுக்குத் துணிசேர் தண்ணீர்போல்
உழைப்போர் கைசே ராதேய்ப்போர்
உள்ளங் கைசேர் தரவியமே!
விலகிச் செல்லும் உறவுகளை
விரைந்தே ஒட்டும் செயலதனால்
நலஞ்சேர் தமிழில் நயமுடனே
நவிலும் பெயரது பசையன்றோ!
உள்ளார் இல்லார் எல்லாரும்
உள்ளிப் பதுக்கினும் ஓரிடத்தில்
நில்லா மல்நீ செல்லுதலால்
செல்வ மெனும்பேர் பெற்றனையோ?
மாசை மனதில் வைத்தோர்தம்
மடியோ டும்நீ சேருதலால்
காசென் னும்பேர் பெற்றனையோ?
காசினி யில்சிறப் புற்றனையோ?
மனமென் பதில்லா மாந்தரொடும்
தனமே! உனக்குத் தொடர்புண்டு...
குணமே இல்லாப் பேருடனும்
பணமே! உனக்கு நட்புண்டு...
நாநய மில்லா பேர்களையும்
நாடும் உன்பேர் நாணயமாம்...
ஆனபேர் யாவிலும் பொருளுமில்லை
ஆயினும் பொருளுமுன் பேர்பெறுமாம்!
அகரம்.அமுதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
lol,so nice
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு