சனி, 6 டிசம்பர், 2008

அருவி!

நான்
வேர்களை முகட்டில்
விரித்து
கீழ்நோக்கி வளர்கின்ற
தண்ணீர் மரம்...

விண்ணை முட்டும்
மலையென்னும் மரத்தின்
ஒற்றை விழுது...


உடலெங்கும்
வெள்ளிச்
சலங்கைகள் கட்டி
நின்றாடும் நர்த்தகி...

குன்றுகளின்
கூந்தல்...
பாறையாம் பானைகள்
பொங்கி வழிகின்ற
பொங்கல்...

நான்நிற்பதாலேயே
ஆறுகள் நடக்கின்றன...

பாறைகள்
என்
விளையாட்டு பொம்மைகள்...

நீங்கள்
கற்களை உரச
தீ பிறக்கும்
நான் உரச
மணல் பிறக்கும்!

நான் விழுகையில்
என் வீரிடலை
சங்கீதம் என்று
சாற்றுகிறீர்கள்

என் பேதைப்பருவத்தை
அருவி என்று
ஆர்க்கிறீர்கள்

மங்கைப் பருவத்தை
ஆறு என்றுக்கூறி
அணைக்கிறீர்கள்

என் மூப்பை
கடல் என்றுக்
கட்டியம் கூறுகிறீர்கள்

என்றேனும் நீங்கள்
எண்ணியதுண்டா
அலைகள் யாவும்
எழுந்துநிற்கத் தோற்று
வழுக்கி விழுகின்ற
அருவிகளே என்பதை?

அகரம்.அமுதா

11 கருத்துகள்:

  1. அன்புள்ள அமுதன்!
    வாவ்!அம்மவோ! அருவியில் இத்தனை எண்ணங்களா?வண்ணங்களா?
    சொல்லக் கூடுதில்லை சொக்கிடும் கவிநேர்த்தி!
    வாழ்த்துகள்!பாராட்டுகள்!

    அன்புடன் பாட்டி,
    தங்கமணி!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றிகள் தங்கமணி பாட்டி அவர்களே!

    மிக்க நன்றி இராம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. //என்றேனும் நீங்கள்
    எண்ணியதுண்டா
    அலைகள் யாவும்
    எழுந்துநிற்கத் தோற்று
    வழுக்கி விழுகின்ற
    அருவிகளே என்பதை?//

    Just the best!!!
    excellent words.
    anbudan aruna

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. // நான்நிற்பதாலேயே
    ஆறுகள் நடக்கின்றன...//

    Wonderful. Keep walking, like that river!

    பதிலளிநீக்கு
  6. நன்றிகளை உரித்தாக்குகிறேன் அண்ணன் பாலு மணிமாறன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. அகரம் அமுதா அவர்களே, தங்களின் கவிதை படித்த போது நல்ல காற்றை சுவாசித்ததுப்போன்று இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி வலை வாசகன் அவர்களே!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு