புதன், 7 மார்ச், 2012

தமிழே!நீ தள்ளிநிற்பாய்!

பொருள்பல சொல்லொன் றிற்குப்
     பூத்தநற் றமிழே! அந்தப்
பொருள்பல தேக்கிப் பாக்கள்
     புனைகிற பாவ லர்க்குப்
பொருளிலா வாழ்வை நல்கப்
     போந்ததேன்? வறுமை என்னும்
இருளிலா வீழச் செய்வாய்?
     எழில்நிலா தோற்றி டாயோ?

எழுதியோன் எல்லாம் இங்கே
     ஏழையே! நானும் அந்தப்
புழுதியில் புரளு கின்ற
     புலவனே; நீயோ எம்மை
வழுதிபோல் வாழ வைக்க
     வரவிலை; வறுமைத் தீயில்
விழுதியென் றிடரித் தள்ள
     விழைந்தனை வாழி நீயே!

வளப்பமே எம்மால் பெற்று
     வாழ்கிறாய்; உன்னால் நாமோ
இளப்பமே பெற்று நிற்கும்
     இழிநிலை; புகழ்ப்பே றுக்கே
அளப்பம்நீ செய்கின் றாய்;அவ்
     அளப்பத்தால் பசிநோய் போமோ?
குளம்படி நீரால் ஆன்தன்
     கொல்விடாய் ஆறப் போமோ?

அதுசரி உன்னை நாடும்
     அறிஞர்க்கே வாழ்வு நல்கப்
புதுவழி கண்டாய் இல்லை;
     புலவர்க்கா வாழ்வ ளிப்பாய்?
இதுதெரி யாமல் யாமும்
     எம்தொழில் கவிதை என்றே
குதிக்கிறோம் குடிசை வாழ்விற்
     கூழுக்கும் பரித வித்தோம்!

உண்டிக்கே உதவி டாத
     உன்றனைக் கட்டிக் கொண்ட
தொண்டிற்கே தொல்லை யுற்றோம்
     தொழிலென உன்னை ஏற்று
நண்டைப்போல் பற்றி நின்றால்
     நலிவுதான் மிஞ்சு மென்று
கண்டிட்டோம்; தமிழே உன்னால்
     கடுகள வேற்றம் காணோம்!

கைப்பொருட் குதவா உன்னைக்
     கற்பதால் பயனில் என்ற
மெய்ப்பொருள் அறிந்த மக்கள்
     விழைகிறார்  வேற்றுக் கல்வி;
பைப்பொருள் பண்ணு தற்கே
     படிக்கிறார் அன்றி உண்டு
துய்ப்பு(ன்)னால் என்றால் சென்று
     தொழுவரோ ஆங்கி லத்தை?

தொலைத்திட எண்ணு கின்றேன்
     தொல்புகழ் தமிழே! உன்னால்
நிலைத்தபே றன்றி உண்டி
     நிறைவதில்; போதும் போதும்
குலைத்ததென் வாழ்வை; இந்தக்
     கொடியதோர் வறுமை நீக்கத்
தலைப்படும் என்னை விட்டுத்
     தமிழே!நீ தள்ளி நிற்பாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக