திங்கள், 29 செப்டம்பர், 2008

வட்டநிலாச் சுட்டவடு!

தென்றல்போல் என்சிந்தை
தீண்ட விழைகிறாள் -வண்ண
மின்னல்போல் விழிவிழுந்து
ஏனோ ஒளிகிறாள்!

பூமயங்கும் பூவிழிகள்
பேசு கின்றன –அதில்
பூமணமும் பாமணமும்
வீசு கின்றன!

பூங்காந்தள் விழிசொல்வ
தென்ன மந்திரம்? –எனை
ஏகாந்தம் சூழ்ந்துக்கொள்ள
என்னக் காரணம்?

தென்றலெனத் தேடிவந்து
தீண்டும் நினைவுகள் -அது
கொண்டவுயிர் கொண்டுப்போகும்
காலன் கயிறுகள்!

கண்ணழர்ந்து தூங்கையிலும்
கவிதை சொல்கிறேன் -நாளும்
உண்ண(அ)மர்ந்து உண்ணாமல்
எழுந்து கொள்கிறேன்!

சிந்தையுற்ற அன்னையெனை
சினந்து கொள்கிறாள் -கையில்
மந்திரித்தக் கயிறெடுத்து
கட்டி விடுகிறாள்!

மணிக்கட்டில் கயிறுறுத்த
வெட்டி எறிகிறேன் -அவள்
பொன்கூந்தல் குழலெடுத்துக்
கட்டிக் கொள்கிறேன்!

சிந்தையெலாம் உற்றநிலா
தொலைந்து போனதே -இன்று
அந்தநிலா இன்னொருவன்
சொந்த மானதே!

வட்டநிலாச் சுட்டவடு
மறந்து பார்க்கிறேன் -அது
முடிவதில்லை என்றபோது
இறந்து பார்க்கிறேன்!

அகரம்.அமுதா

1 கருத்து: