வியாழன், 29 மே, 2008

தத்தித் தவித்தேன் தளர்ந்து!

ஒரு வீடியோப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அவ்வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக்கவும்.செய்தி இதுதான் உயிரோடு ஒரு மீனை அடுத்து அதன் செதில்களை நீக்கி வயிற்றைக் கிழித்துக் குடலை நீக்கி அதைத் துடிக்கத் துடிக்க அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு வானலில் (சுடுஎண்ணையில்) உடல்வரை வறுத்து எடுத்து (இப்பொழுதும் மீன் உயிருடன் தான் உள்ளது) தட்டில் வைத்துப் பரிமாறுகிறார்கள் (ஓர் ஹோட்டலில்) (சீனாவா ஜப்பானா என்பது தெரியவில்லை) அந்த ஹோட்டலில் பணிபுரியும் மனித மிருகங்கள். அதையும் கூடியமர்ந்து சில மனித மிருகங்கள் (இப்பொழுதும் மீனுக்கு உயிரிருக்கிறது) கிழித்துத் தின்கிறது. இவ்வீடியோ பதிவைப் பார்த்து அதிர்ந்தேன். அதன் காரணமாய்த் தோன்றிய வெண்பாக்களே இவைகள்.

அந்த இறுதிக் கட்ட வேளையில் அம்மீனின் நிலையிலிருந்து எழுதப்பட்டது.

நீக்கிச் செதிலையெல்லாம் நீராட்டி நீள்குடலைப்
போக்கிநெய்க் கொப்பறையின் பொங்குநெய்யில் -தூக்கியிட
வேகுதே மேனி மிகவெப்பத் தால்அய்யோ!
நோகுதே வாலின் நுனி!

துள்ளித் துடித்துத் துவண்டு வழுக்கிவிழ
அள்ளி குடலை அகற்றியுடல் -முள்ளை
ஒடித்தார்; உடல்நோவ உப்பளம்போல் என்னை
எடுத்தார் சுடுநெய்யுள் இட்டு!

சிக்குண்டேன்; நீள்வலையுள் சிக்கிநீ ராடிதன்னில்
முக்குண்டேன்; கொண்டசெதில் முற்றிலுமாய் -நீக்க
நறுக்குண்டேன்; எண்ணைப்பி சுக்குண்டேன்; மேனி
கருக்குண்டேன்; உண்டார் களித்து!

வெந்தப்புண் தன்னில்வேல் வீசுதல்போல் அய்யய்யோ!
நொந்தயென் மேனிதன்னை நோக்கியே -வந்துவந்துக்
குத்திக் கிழித்துக் கொடும்பசி யாற்றுகிறார்
தத்தித் தவித்தேன் தளர்ந்து!

அகரம். அமுதா!

6 கருத்துகள்:

  1. உங்கள் வெண்பாக்களை எல்லாம் பார்க்கும் போது என் வலைப்பூவை இழுத்து மூடி விடலாமா என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. பரிசல்காரா பரிசல்காரா அப்டில்லாஞ் சொல்லாதீங்க. ஒங்கள்ட பரிசல்லாம் இருக்கு அக்கரை இக்கரைண்ணு இல்லாம எக்கரையிலும் இலகுவா தடம்பதிச்சிடுறீங்க. என்ட பரிசலுமில்ல நீச்சலுந் தெரியாது. அதனால இக்கரையிலயே கெடக்கிறேன். ஒம்மளப் பாத்துத் தாமய்யா நா மெரலுறேன்.

    பதிலளிநீக்கு
  3. எப்படி இந்த அளவுக்கு மொழிப்புலமை உங்களுக்கு! வெண்பா போட்டியின் முடிவு இப்போதே தெரியும். ஒரே நிம்மதி, எனக்கு வெண்பா எழுதும் உத்தேசம் சற்றும் இல்லை என்பதுதான். வாழ்க நீவிர் ! வளர்க உம் பணி !

    பதிலளிநீக்கு
  4. தங்களது பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அனுஜன்யா அவர்களே! -அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் மக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு