திங்கள், 21 ஏப்ரல், 2008

நடிப்பு!

நாடக மேடை யின்றி
      நடிக்கின்ற நாய கர்கள்
நாடகம் நிறைந்த தாலே
      நடிகர்க்குப் பஞ்ச மில்லை!

நாயகர் சிலரே யுண்டு;
      நரிப்புத்தி கொண்டி ருக்கும்
தீயவர் பலபே ருண்டு
      தீங்கினைச் செய்வ தற்கு!

பக்தராய் வேட மிட்டு
      பாழ்தொழில் செய்வார்; தத்தம்
சக்தியே மேலாம் என்று
      சூழ்ச்சியும் தீதும் செய்வார்!

நாநயம் விற்றே விற்றே
      நாட்டிலே இங்கோர் கூட்டம்
நாணயம் பெருக்கிக் கொள்ளும்
      நாடகம் தொடர்ந்து செல்லும்!

உண்மையே ஊமை ஆகி
      ஊனமாய் ஆன தாலே
உண்மையைப் பேசு தற்கே
      ஊதியம் வழங்க வேண்டும்!

வித்தைகள் நூறு செய்து
      வியத்தகு நடிப்பைக் காட்டும்
வித்தகர் வழங்கக் கேட்டால்
      விருதுக்குப் பஞ்சம் தோன்றும்!

அதிகாரம் கையில் இல்லை;
      அரிதாரம் பூச வில்லை;
அதி-காரம் பேச்சில் காட்டும்
      அவர்கள்போல் நடிக ரில்லை!

அவரவர் பாத்தி ரத்தை
      அவரவர் தேர்ந்து கொண்டு
நவையின்றிச் செய்வ தாலே
      நாடகம் விளங்க வில்லை!

நாயகன் நடத்து கின்ற
      நாடகம் விளங்கி விட்டால்
நாயகம் கொண்ட மாந்தர்
      நடிப்பதை நிறுத்தக் கூடும்!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

  1. அகரம் அப்படீங்கிறது உங்க ஊரா?

    பதிலளிநீக்கு
  2. தமிழ் சாகரத்தில் ஆழ்ந்து போனேன். முத்தெடுக்க எண்ணி இறங்கினால் எதை விட எதை எடுக்க என்ற எண்ண ஓட்டத்தில் மூச்சடங்கிப் போனேன்,வாயடைத்து நின்றேன் .விரல்களில் தமிழ்தாய் வீற்றிருக்கிறாளா.

    பதிலளிநீக்கு
  3. அகரத்திலேயே இந்த போடு போடுகிறீர்களே இன்னும் அக்கன்னா வரை போனால் ...

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள்! வணக்கம்! தாங்கள் தோழியா? தோழனா? தங்கள் பெயரென்ன? தாங்கள் கூறும் அளவிற்கெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ தெரிந்ததை எழுதுகிறேன். தங்கள் வரவு கண்டு இரும்பூதெய்துகிறேன். மீண்டும் வருக! கருத்துக்களை அள்ளித்தருக!

    பதிலளிநீக்கு
  5. நானும் உங்களைப் போல்தான் ஏதோ தோணும் எப்படியோ எழுதுவேன் .தோழி
    கோமதிநடராஜன்

    பதிலளிநீக்கு