புதன், 17 ஜூன், 2026

 

அப்பா!            

 

பல்லவி :-

 

காதுக்குள்ள கத்தி

காட்டுத்தீயா குத்தி

கண்ணுக்குள் தீப்பூக்குதே – ரத்தம்

கண்ணீரில் வாய்பார்க்குதே – என்

ஆகாயம் – அதில்

ஏன்காயம்? – நெஞ்சில்

ஈட்டி பாயும் – செய்தி

பொய்யா போனா ஞாயம்!

 

சரணம் :- 1

 

என்கையப் புடிச்சி

உன்னோட அணைச்சி

ஆவன்னா நீ வரைஞ்ச – நான்

அழுதாக்கா நீ கரைஞ்ச!

களித்துண்டு உருட்டி

கறிகொண்டு புரட்டி

என்வாயில் நீ நுழைஞ்ச – என்

எச்சிலில நீ குழைஞ்ச!

தோளுல தூக்கிநீ

சுத்திக் காட்டின…

மாருல வாங்கிநீ

புத்தி ஊட்டின…

சிங்கம்நீ அப்பா!

உனக்குண்டா ஒப்பா?

 

 

 

சரணம் :-2

 

தனியாக ஒழைச்சி

மெழுகாக இளைச்சி

கரசேர்த்த இதுவரைக்கும் – உன்

காய்ப்புக்கை அதஉரைக்கும்!

உனக்குன்னு எதுவும்

சேர்க்கல துளியும்

உம்போல யார்எனக்கும் – சாமி

ஒசரம்உன் கால்வரைக்கும்!

ஆதியும் அந்தமும்

     ஆன ஜீவனே!

பாதியில் விட்டுநீ

     போவதோ எனை?

சிங்கம்நீ அப்பா!

உனக்குண்டா ஒப்பா!

 

சரணம் :-3

 

கொடுமழை பொழிந்தும்

குடிசைக்குள் வழிந்தும்

     நனையாம நீவளர்த்த – உன்

     கண்ணீர யார்உலர்த்த?

பேனாவக் கேட்டா

பென்சீலு தருவ

     உன்னத்தான் நான்சீவி – தெனம்

     எழுதினேன் உன்ஆவி!

கோவணத் தாலநீ

     உன்ன மூடின

கோட்டுசூட் வாங்கிநீ

     எனக்கு மாட்டின

சிங்கம்நீ அப்பா!

     உனக்குண்டா ஒப்பா?                      -அமுதன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக