சனி, 13 ஜூன், 2026

 

தும்பைப்பூ உள்ளம் துளங்குந் தளிரிடையாள்

வம்பைப்பூ வென்றுன் விழிவண்டு –நம்பிப்போய்த்

தேடும்; செழுந்தேனைச் சேர்க்கும்; பொழுதெலாம்

கூடும்; மறந்துதன் கூடு!

 

மொழுமொழு கன்னத்தை முத்தமிட; வேர்வை

வழுவழு தேகம் வடிக்கும்; –கொழுகொழு

வம்புகள், ‘தம்மோடு வம்புகள் செய்’யென்ன

இம்மென்று செல்லும் இதழ்!

 

கடித்துவைக்கும் பல்லால் கனிந்தவிரு கன்னம்

தடித்துவைக்கும்; அஃதேபோல் தானும் –வெடித்துவைக்கும்

வண்ணம் விளையாட வம்பழைக்க ஏகும்தன்

எண்ணம் பலித்த எயிறு!

 

பக்கம் அமர்ந்தாளைப் பற்றி இழுத்தணைத்(து)

ஒக்கலில் கைகள் உறவாடும்; –அக்கணம்

தாரம் அவளும் தளிர்வாயைத் தந்திடுவாள்

தாரம் சதிராடத் தான்!

 

நல்லதேன் எங்கென்று நாடி மிகச்சுவைத்(து)

அல்லதேன் இங்கென் றடுத்தயிடம் –செல்லாதோ

வேரிமிக மண்டுண்ட மேகலையாள் தெள்நறவை

வாரிமிக மொண்டுண்ட வாய்!

 

மகிழம்பூ மேனி வனப்பை மறைக்குந்

துகிலை அகற்றித் தொடங்கும்; -நகிலமதைப்

பற்றிக்கொண் டோர்கை பதம்பார்க்க மென்மருங்கில்

தொற்றிக்கொண் டோர்கை தொழில்!

 

வில்லாய் வளைந்துதன் மென்னரம்பை நாணாக்கிக்

கொல்லும் கணையாகக் கொங்கையினை –நல்லாளும்

ஏந்திப் பிடிப்பாள்; எதிர்கொண்(டு) இடைவாளை
ஊன்றத் தணிவாள் உளம்!

 

 

இல்லா இடையில் இருக்கின்பம்; பேரின்பம்

இல்லா இறையில் இருத்தல்போல்; -அல்லெலாம்

அஃதை அடைய அவளும் இசையாளோ

எஃகனையாய்! உன்னோ டியைந்து!

 

செண்டதனைச் சூடிவந்து செம்மா துளைநிற்கும்;

கண்டதனைத் தொட்டமர்த்திக் காணாத -கண்டதுபோல்

தாவா தழைப்பாய் தளிர்க்கொடியைப் பஞ்சணையில்

நோவா தணைப்பாய் நுசுப்பு!

 

இருட்டுக்குள் இன்னோர் இருட்டான கூந்தல்

இருட்டுக்குள் நீசெயும் இன்பத் -திருட்டுக்குச்

சாட்சியாய் நிற்கும் வதனநிலா; சாமத்துக்

காட்சியைக் கண்விழித்துக் கண்டு!

 

அகலில் திரியை அழுந்தவே தூண்டித்

தகுநெய் விடத்தீ தணித்துச்  –சுகச்சுடர்

சிந்திக் கிடப்பாளின் சிந்தை உனைமீண்டும்

பந்திக் கழைக்கும் பரிந்து!

 

காலில் ஒன்றிரண்டைக் காணாமல் கட்டிலது

நூலில் அமைந்தயிடை நூதனப்போர் -சோலிதனில்

மிச்சத்தைச் செய்கும் மிடுக்கோடு நீர்முயல

அச்சத்தை வைகும் அகம்!

 

உயிர்நெடில் ஓரேழும் உம்கலவிப் போரில்

பயின்றுவரப் பக்கத் தறையில் –துயின்றுவரும்

பெற்றோர் விழிக்கப் பெறுவரோ வென்றவற்றைக்

குற்றொலிக்கச் செய்வாள் கொடி!

 

முலைமுகம் போந்து முதுகினில் தோன்ற

தலைவனை ஆரத் தழுவிக் –கலைமுகம்

காட்டும் நகக்குறியைக் கன்னி அவள்பதித்தல்

ஈட்டுமின் பத்தின்எல் லை!

 

 

இன்னும் ஒருமுறை ஏலுமோ என்னன்பே!

முன்னம் புரிந்த முறையெலாம் –என்பவளைப்

பின்னும் ஒருமுறை பேரவா கொண்டணைக்கச்

சின்னம் சிலிர்ப்பாள் சிவந்து! கன்னம் சிவப்பாள் கனிந்து!

 

பஞ்சணையில் தூங்கல் பழுதென்று தான்கொண்ட

நெச்சணையில் துஞ்ச நெருங்கிவரும் -மஞ்சனைத்தன்

வட்டவளைக் கையால் வளைப்பாள்; கசங்கும்மார்

வட்டவளைத் திட்டும் வரிந்து!

 

பொத்துவாள் அங்கையாள் பூமுகத்தைப் பொய்யாகக்

குத்துவாள் கொங்கைகளைக் கொண்டுன்னை –முத்தவாள்

கொண்டுநீ இச்சுறுத்த கோதை உடல்கொதித்(து)

அண்டிப் புரிவாள் அமர்!

 

சிந்தும் வியர்வை; சிலிர்த்துக் குழையும்;நீ

தந்துநிற்கும் இன்பத் தழுவலால் –கொந்தடங்கும்;

அத்தியூர் வாழ்வரதா! ஐந்தாம் பிறையன்ன

நெத்தியூர் கின்ற நிலா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக