கடைசி
கண்ணீர்!
உப்புக் கண்ணீர்நான்
உகுத்ததில்லை இதுவரை
உள்ளம் கவர்ந்தவளே!
உனைக்காணும் அதுவரை
தாயடித்து அழுததில்லை
தந்தைமடி புதைந்ததில்லை
– உன்
நினைவடித்து நிலையிழந்து
நான்விழுந்த நொடிவரை
அழகழகாய்க் கனவுகளை
அடிமனதில் வடித்தாய்
அரும்பரும்பாய்ப் பூத்துப்பூத்துக்
கவிதைகளைப் படித்தாய்
சம்மதத்தை ஓரவிழி
சாட்டைவழி மொழிந்தாய் – என்
தருணங்களைச் சுவையுடைய
தேன்சாறாய்ப் பிழிந்தாய்
இப்படியாய் உச்சிவானில்
எனைத்தூக்கிப் பறந்தாய்
– என்
கற்பனையின் ஊற்றுக்கண்ணைக்
கணப்பொழுதில் திறந்தாய்
இப்படியோர் மோனநிலை
அனுபவிக்கும் போது – எனை
இடையினிலே விட்டுவிட்டு
விலகுவதோ கூறு!
இருக்கின்ற கண்ணீரை
இதயவாளி இறைக்க – இந்தத்
துயரங்களை எப்படிநான்
சொற்களிலே வடிக்க?
கொட்டுகிறேன் கண்ணீரைக்
குற்றாலம் போலே
கொட்டுதற்கு இல்லையடி
கண்ணீர்இனி மேலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக