புதன், 17 ஜூன், 2026

 

என் ஊர்!

 

அகரம் சீகூர் எனும்பெயர் அமைந்த

அழகிய சொர்க்கம் தான்என்ஊர்

தகரம் என்னைத் தங்கம் ஆக்கி

சாதனை படைத்த ஓர்பொன்னூர்

வடக்கினில் ஆறும் தெற்கினிலே

வகையாய் ஏரியும் இருக்கிறது

கிழக்கில் மேற்கில் அமைந்திருக்கும் – வயல்

கிளிப்பச்சை பயிர்களை வளர்க்கிறது

 

திருமாங் கனிகள் சிரிக்கும் தோப்பும்

தென்னை பனையும் அங்குண்டு

சிறுவாய் அணில்கள் சுவைக்கிற பழத்தில்

சிறுவர் களுக்கும் பங்குண்டு!

ஆலம் விழுது தரையிறங்கி

ஊஞ்சல் ஆட உதவிடுமே

ஆரும் கேட்க ஆளில்லை – கிளைமேல்

அமர்ந்து ஒருகிளி கதைவிடுமே!

 

உறவைச் சொல்லி உரிமை பேசி

ஒருஆண் காதல் வலைவிரிப்பான்

அறிவைப் பேணும் ஆடவன் எவனோ

அவனைப் பெண்ணும் மணம்முடிப்பாள்

உழைப்பால் எங்கள் உடல்வடிக்கும்

வியர்வை கறைக்கும் கல்லையடா

பகிர்ந்து உண்ணும் பழக்கத்தால் – அங்கு

பட்டினிச் சாவே இல்லையடா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக