அப்பா!
அப்பா! உன்னப்போல்
அரவணைக்க யாரிருக்கா?
ஒப்பா ஒருவரைநான்
உரைக்கவேற ஆளிருக்கா?
ஒந்தோளில் ஏறி ஊர்கோலம் போன
அந்நாளும் அரும்பிடுமா? – அந்த
சந்தோஷம் திரும்பிடுமா?
வெளியே சூரியன்நீ
உள்ளே சந்திரன்நீ
நான்வளரத் தேய்ந்தாய்நீ
ஆண்வடிவத் தாய்தான்நீ
நான்காணும் கனவுகளில்
நீதானே என்ஹீரோ
நீயின்றி இப்போது
நானிங்கே வெறும்ஜீரோ
என்தாகம் தீர்க்க
நதியாக நீபாய்ந்தாய்
நெடுந்தூரம் நான்போக
செருப்பாக நீதேய்ந்தாய்
நீகாட்டிய உலகில்நான்
நிம்மதியா வாழுகிறேன்
நான்வாழும் உலகில்நீ
இன்றில்லையே வாடுகிறேன்!
எனக்காகத் துடித்த
இதயம் ஓய்ந்ததோ?
எனக்காக ஓடிய
கால்கள் ஓய்ந்ததோ?
வயிற்றில் சுமக்க
வழியில்லா காரணத்தால்
நெஞ்சில் சுமந்தே
நிம்மதி அடைந்தாய்
தந்தையாய் நீயானாய்
தடுமாற்றம் கொண்டதில்லை
தோழனாய் நீயானாய்
தடமாற்றம் கண்டதில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக