புதன், 17 ஜூன், 2026

எனக்குள் அவள்!

 

எனக்குள் அவள்!

 

அம்மாவுக் கென்மேல

அன்புதான் ஆனாலும்…

அப்பாவின் பாசத்திற்(கு)

அளவில்லை என்றாலும்…

 

ஒட்டாரம் நான்செஞ்சா

ஒன்னுரெண்டு ஒதகெடைக்கும்!

அப்பெல்லாம் அவகைதான்

அன்பாக அரவணைக்கும்!

 

அவமட்டும் தான்என்னைக்

கைநீட்டி அடிச்சதில்ல…

அவளிருக்கும் வரையில்நான்

கண்ணீரு வடிச்சதில்ல…!

 

அக்குளுல விரல்விட்டுச்

சிரிப்புமூட்டி விடுவா!

தொப்புளுல முகம்பொதைச்சிக்

கிளுகிளுப்பைத் தருவா!

 

நடுநடுங்குங் கையால

நல்லெண்ணை தேய்ப்பா

வெடவெடக்கும் விரலால

வெளக்கெண்ணை வைப்பா

 

சுகமெனக்கு இல்லைன்னா

சுக்குமிளகு இடிப்பா

விரைவில்நான் நலமாக

விரதங்கள் இருப்பா

 

கிள்ளாம கன்னத்தைக்

கிள்ளிநெட்டி முறிப்பா!

சொல்லாம பாசத்தை

சுறுக்குப்பையில் முடிப்பா!

 

தின்பண்டம் வாங்கிவந்து

தின்னவெச்சி ரசிப்பா!

தித்திக்கக் கதைசொல்லி

செவிகளை நிறைப்பா!

 

 

அவசொல்லும் கதையில

நான்முருகன் அவவள்ளி…

அப்படித்தான் ஆரம்பிப்பா

அன்னாடம் கதைசொல்லி…!

 

கதசொல்லும் பொழுதில்

கணநேரம் இடைவிடுவா!

இடைவிட்ட காரணத்தால்

எங்கிட்ட ஒதபடுவா!

 

அழகில்லை ஆனாலும்

அவளெனக்கு தேவதை!

மவராசி அவதான்னா

மறுப்பது யாரதை?

 

அப்படியோர் பெண்ணரசி

ஆருன்னா கேட்டீங்க?

அவதாங்க அவதாங்க

என்னோட பாட்டிங்க…!

 

வேப்பம்பூ கொழம்புவெச்சா

வெல்லமா இனிக்கும்!

வெஞ்சனம் அரைச்சிவெச்சா

வீதிவரை மணக்கும்!

 

சத்தியமா அவபெசஞ்சித்

தரும்பிடிச் சோறு

தொன்னையில நெய்கணக்கா

தொண்டையில வழுக்கும்!

 

அக்கால ஔவைக்கு

அப்பத்தா சளச்சவளா?

இக்கால ‘பரவை

முனியம்மா’-க்கு எளச்சவளா?

 

தமிழெழுத்து அஃகுப்போல்

தடம்பதிப்பா கம்பூனி – அவ

தயிர்கடைய எழும்இசைக்குச்

சமந்தானா சிம்போனி?

 

 

அப்பப்பா! பாக்கத்தான்

அப்பத்தா அஞ்ஞானி!

வெவரம் பலஅறிஞ்ச

வில்லேஜி விஞ்ஞானி!

 

நாலணா எட்டணா

நானெடுக்கும் போதில

வட்டி,அசல் கேட்காத

வங்கிஅவ சுறுக்குப்பை…

 

வேர்வைசிந்தி நான்ஒளச்சி

தேவைக்குமேல் சேர்த்ததுல

கோடிகோடி பணமிருந்தும்

எம்பணப்பை வெறுங்குப்பை!

 

ஆத்தா பக்கத்தில்

முன்னிரவில் நான்தூங்கி

அப்பத்தா பக்கத்தில்

அதிகாலை கண்விழிச்ச

இந்த அதிசயம்

எப்படின்னு வெளங்கல…

எனக்கொரு மகன்வந்து

பொறக்குற வரையில…!

 

அவளப்போல் யாரிருக்கா

ஆருதல் மொழிசொல்ல?

அவளிடத்தை நெறப்பவொரு

ஆளிருக்கா? விடைஇல்ல!

 

ஆயிரங்கண் கந்தைசுற்றி

மானங்காத்த அவளெங்கே?

ஃபேஷனென்ற பேரிலே

மேனிகாட்டும் பெண்ணெங்கே?

 

அவஅரைச்ச அம்மி

அடுப்பங்கரை நிறைக்குமா?

அவஇடிச்ச உரலு

புழக்கடையில் புழங்குமா?

 

 

 

பலநோய்க்கு தீர்வாச்சே

பாட்டி வைத்தியம்!

பலர்க்கிப்போ புடிச்சிருக்கே

பார்மசி பைத்தியம்!

 

அத்தனையும் பாக்கும்போது

அவநெனப்பா இருக்கு…

புத்திக்குள்ள புடிக்குது

பொசுக்குன்னு கிறுக்கு…!

 

வெத்தலைவாய் முத்தங்கள்

வைப்பாயே அப்பத்தா!

ஒத்தமுத்தம் வேணுமடி

உயிர்த்தெழுந்து இப்பத்தா!

 

            அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக