மாதங்கள் பத்து
மடிசுமந்தாள்; பின்பென்னை
மாரோடும் தோளோடும்
மிகச்சுமந்தாள்; அன்றாடம்
கண்ணுக்குள் எனைவைத்து
கவனமாய் வளர்த்தாள்!
என்னுடலில் நோவென்றால்
இருதயம் வெடித்தாள்!
சிங்கம் புலியென்றும்
சீமைத்துரை தானென்றும்
தங்கம் இவனென்றும்
தாலாட்டுப் படித்தாளே
இன்றுநான் கவிபாட
ஏற்றபல சந்தங்களும்
வண்ணத் தமிழையும்
வாரிக் கொடுத்தாளே!
தன்கண்ணில் பார்த்தவற்றை
என்கண்ணில் வார்த்தாளே
என்கண்ணின் ஏக்கங்களை
இமைப்பொழுதில் தீர்த்தாளே!
உதட்டோடு முத்தமிட்டு
உசுரில்பாதி இட்டுவைத்துத்
திகட்டாத அன்புவெச்ச
தாயவளை மறப்பேனா?
தடத்தில்தாள் பதியாது - அவள்
தளித்தோளில் தடம்பதித்து
நடைபயின்று நான்வளர்ந்த
நாட்களை மறப்பேனா?
வயிற்றில் சுமந்துகொண்டே
வயல்வெளியில் உழைத்தவளை…
வாயொடு வயிற்றைக்கட்டி
வளர்க்கப்பாடு பட்டவளை…
காலங்கள் மறந்திடலாம்
நாளங்கள் மறந்திடுமா
நெஞ்சமதை மறந்துவிட்டால்
நல்லகதி சேர்ந்திடுமா?
கடையாணி உடைந்துவிழ
கடைக்குட்டி வண்டிக்குக்கீழ
உடையாத மனமுடைந்து
மூர்ச்சையற்றுக் கிடந்தஅப்பன்
அறியாத பாலகன்நான்
தெரியாமல் தவறுசெய்ய
திட்டினால் திருந்தேனென்று
தூணில்கட்டித் தொலுரித்தார்
கேள்விப்பட்டு ஓடிவந்து
கோவென அழுதுகொண்டே
இரத்தக்கண்ணீர் வடித்தவளை
இமைப்போதும் மறப்பேனா?
பெற்றபிள்ளை புத்திக்கெட்டுப்
பேசிய பேச்சையெல்லாம்
ஒத்தநொடிப் பொழுதுக்குள்ளே
பெற்றவள் மறந்திடலாம்…
அத்தனையும் கனவில்வந்து
அம்புமழை பொழிகிறதே!
நித்தநித்தம் நினைவிலாட
நித்திரையும் தொலைகிறதே!
நான்பிறந்த அப்புறம்தான்
நெல்லுசோற்றைக் கண்டோமென்ற
தித்திக்கும் சேதிசொல்லி
திருஷ்டிசுத்திப் போட்டாளே
நெல்லுசோற்றை கிடக்கட்டும்
நேசமனம் கொண்டவள்
நான்பிறந்த அப்புறம்
நல்லசோறு தின்றதுண்டா?
ஆப்பரேஷன் தியேட்டரிலே
அன்றொருநாள் கிடக்கயிலே
அன்புமுகம் பார்ப்பதற்கு
அற்பனிவன் வந்ததில்லை
கருணையுள்ள தாய்மனது
கடுகளவும் கலங்கவில்லை
நினைத்தால் அழுகைவரும்
நதியூறும் கன்னத்திலே
மூன்று வயதிலநான்
அவள்நெஞ்சில் உதைக்கயிலே
உதைத்த காலைச்சுற்றி
முன்னூறு முத்தம்வைப்பாள்
பதினாறு வயதுலநான்
படுத்திய பாடுக்கென்
பிணத்துக்கும் சாபம்சேரும்
பிணந்தின்னி விலகிஓடும்
ஆத்தா!அடி ஆத்தா!
நான்செத்தா கொல்லிவையி
முந்திக்கிட்டுப் போயிட்டீன்னா
பேரங்கிட்டச் சொல்லிவையி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக