ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்!
விஜய் –
என்சொல்லித் தேற்ற? எதைநான் அரங்கேற்ற?
இன்சொல்லால் ஆமோ இடராற்ற? – அன்னையைச்
சூழ்ந்தமர ணத்தால் துயரப் படுமுனக்கென்
ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்! 01
அஜித் –
கிழியாத நெஞ்சம் கிழிந்தவெனக் குந்தன்
அழியாத அன்பை அளித்தாய் – விழியால்
நிஜமாய் மனதார நன்றிபல நின்றன்
விஜயத்திற் கீந்தேன் விஜய்! 02
விஜய் –
தாயை இழந்து தவிக்கின்ற நண்பனே!
சேயைப்போல் விம்மும் சினேகிதா! -
தீயையள்ளி
இட்டசெய்தி கேட்டிடிந்தேன்; என்போல்
இடிந்தஉன்னைத்
தொட்டணைத்துத் தேற்றவந்தேன் தோள்! 03
அஜித் –
தக்க சமயத்தில் தாங்கிப்
பிடித்தெனது
துக்கங்கள் யாவும் துடைப்பவனே! -
மக்கள்
முதல்வனே! என்தாய் மடிபிறவா மூத்த
புதல்வனே! ஆறாதிப் புண்! 04
விஜய் –
முற்றும் துறந்த முனிவனையும்
விட்டுவைக்காப்
பெற்றதாய்ப் பாசம் பெரிதன்றோ? – பற்றுவிட்டும்
தட்டிக் கழிக்காமல் தாய்இழப்பைக்
கண்ணீரால்
பட்டினத்தான் பாடிவைத்தான் பாட்டு! 05
அஜித் –
ஆரடித்த போதும் அசையா இரும்புநெஞ்சம்
பாரடித்துக் கொண்டு படபடத்தல்; – பேரதிர்ச்சி
தந்துவிட்டுப் போய்விட்டாள் தாய்;நான் அனாதையாய்
நொந்துசா கின்றேன் நொடிந்து! 06
விஜய் –
நாள்முழுதும் நாமிணைந்து நான்குகண்க
ளாலழுதும்
மீள்வதில்லை சென்றவுயிர் மேனியிடம்; – வாள்கிழித்த
நெஞ்சின் வடுபோல் நிலைத்ததுயர் என்றாலும்
கொஞ்சம் தணிவாய் கொதிப்பு! 07
அஜித் -
பால்வழியத் தொட்டில் படுத்துறங்க
வைத்தவளைக்
கால்கழிந்த கட்டிலிலே காண்பேனோ? – தால்சுமந்த
தாலாட்டும் எங்கே? தளிர்வாய்ச்
சிரிப்புமெங்கே?
ஏலாதோ கேட்க இனி!? 08
விஜய் –
பத்தாள் பலம்கொண்ட பந்தைய வீரன்நீ
கொத்தாய் நிலைகுலையக் கூடாது; – புத்தேள்
உலகிருந்து உன்னை உயர்த்துவாள் அன்னை
நலம்விளைக்கும் நன்நினைவை நத்து! 09
அஜித் –
தஞ்சமாய் உன்மடியைத் தந்ததால் நண்பனே!
கொஞ்சமாய் நிம்மதி கொள்கிறேன்; – பஞ்சராய்
ஆனஎன் நெஞ்சுக் களித்தாய் அமுதமொழி
தேனள்ளிப் பேச்சில் தெளித்து! 10
எளிய மொழியால் இனியவெண் பாக்கள்
உளமே உருக உரைத்தீர் - களிசேர்
கவின்றமிழ்க் கோவே கவிப்பெருக்கே என்று
நவின்றுமை வாழ்த்திடுமென் நா.
- இமயவரம்பன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக