வியாழன், 4 ஜூன், 2026

காவியமே செய்வார் கவி!

காவியமே செய்வார் கவி!

 

ஓவியன் கூற்று -

 

கண்ணைச் சிமிட்டாமல், கைகால் அசைக்காமல்,

பெண்ணே!என் நெஞ்சைப் பிசையாமல், – வண்ணவிதழ்

ஓரம் பிதுக்காமல், ஓதி ஒதுக்காமல்

பாரம் பதுக்காமல் பார்! 01

 

ஓதி – தலைமுடி

 

காவியமாய்த் தீட்ட கவிஞனல்ல நானுன்னை

ஓவியமாய்த் தீட்ட உடன்பட்டேன்; – பூவினமே!

அச்சுஅசல் மாறாமல் அப்படியே தாள்வரைந்து

உச்சிகுளிர் விப்பேன் உனை! 02

 

வட்டமாய்க் கண்கள், வளைந்தநெற்றி, பொன்கன்னம்,

திட்டமாய் மூக்கதன்கீழ் தேனிதழ்கள்; – சிட்டே!நீ

பொய்க்கால் குதிரையினி; பூரித்த ஓவியம்தான்

மெய்க்கால் குதிரையினி மேல்! 03

 

பிக்காசோ என்னிடம் பெய்ண்டிங் படிப்பதற்குத்

சிக்கனமாய் டைம்ட்ராவல் செய்தவன்தான்; – அக்கணமே

ஆற்றல் திரட்டி அவன்வேண்டு கோட்கிணங்க

நூற்றளித்தேன் மோனலிசா நோட்ஸ்! 04

 

சித்தன்ன வாசல் சிவப்புக்கொட் டோவியங்கள்

அத்தனையும் என்முன்னோர் ஆக்கியதே; – இத்தனைக்கும்

காப்பிரைட்ஸ் கேட்டு கலகம்யாம் செய்ததில்லை

ஹேப்பியாய் ஊர்க்களித்தோம் ஹிஃப்ட்! 05

 

டைட்டானிக் பார்த்ததுண்டா? டாவ்சன் வரைவானே

லைட்டொளியில் ரோஸ்உருவை லைவ்வாக, – லைட்டாய்நான்

கற்பித் ததைத்தான் கனகச் சிதமாக

முற்றளித்தான் கேமரா முன்! 06

 

டாவ்சன்(ஜேக் டாவ்சன்), ரோஸ் – டைட்டானிக் படத்தின் கதாநாயக நாயகியின் பாத்திரப் பெயர்கள்.

 

தான்வனைந்த பெண்ணையே தாரமாய்க் கொண்டாரே

நான்முகர்; ஈங்கவர்க்கு நான்பேரன்; – நான்வரைந்த

பெண்ணைமணப் பேனென்ற பேரச்சம் தேவையில்லை

கண்ணைக் கசக்காமல் காட்டு! 07

 

அங்க இலட்சணங்கள் அத்தனையும் அப்படியே

இங்கோ வியத்தில் இறக்குகிறேன் – பங்கயமே!

ஓவியமா? நீயா? உசத்தி எதுவென்று

காவியமே செய்வார் கவி! 08

 

கூந்தல் அருவி குளித்தேகும் தென்றல்உன்

நாந்தினில் ஆடும் நடனத்தைக் - காந்தம்போல்

ஏந்திநான் வைத்த எழிலைநீ கண்டாயேல்

நீந்துவாய் கற்பனையில் நெஞ்சு! 09

 

நாந்து – முதுகு(பேச்சுவழக்கு)

 

சித்தன் நிலையை சிவன்நிலையை நீயடைவாய்;

புத்தன் நிலைக்குமே போய்விடுவாய்; – மொத்த

உலகப் புகழ்படைத்த ஓவியத்தின் மேலென்(று)

இலகி இரண்டுவைப்பாய் இச்! 10


அகரம் அமுதன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக