வியாழன், 25 ஜூன், 2026

 


வண்டலைப்போல் மொத்த வளங்களையும் காண்பவர்க்குக்

கொண்டலைப்போல் அள்ளிக் கொடுப்பவனே! – துண்டலைகள்

சூழ்ந்திருக்கும் பூமிபோல் சூரியன்போல் வானம்போல்

வாழ்ந்திருப்பாய் நீளாயுள் வாய்த்து!

 

பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்

சொல்லாண்டு பாடுகிறேன் தூயவனே! – இல்லாண்டு

செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு

வையத்துள் வாழ்வாங்கு வாழ்!

 

ஈகைவல்லான் தாள்வாழ்க! ஈன்றெடுத்த தாய்வாழ்க!

தோகைநல்லார் தொற்றுகின்ற தோள்வாழ்க! – வாகைமௌலி

ஏந்தும் சிரம்வாழ்க! ஈயும் கரம்வாழ்க!

நீந்தும் நெறிவாழ்க நெஞ்சு!

 

கண்ணன் ரவிஇன்னோர் கர்ணன் எனுமாறு

மண்ணில் பிறந்து வழங்குகிறான்; – விண்ணுலவும்

வெண்ணிலவே! தண்ணொளியை வேண்டி இரப்பாயேல்

என்றும் அமாவாசை இல்!

 

உப்புக் கடல்நாளை உண்ணும் படியான

அப்புக் கடலாக ஆகிவிடும்; – ஒப்பில்லா

மன்னவன் கண்ணன் மணிக்கரம் பட்டகணம்

தன்னுடல் உப்புத் தகர்ந்து!

 

குபேரனுக்கும் கொட்டிக் கொடுப்பான்; திருநீற்றுச்

சபேசனுக்கும் அள்ளித் தருவான்; – அபேதமின்றி

யார்க்கும் அளவறிந்து ஈயும் குணத்தானைப்

பார்க்கெடுத்து ஓதுமென் பாட்டு!

 

பங்களா கார்வாங்கிப் பாசனநீர்க் காவாங்கித்

திங்களை வாங்கித் திசைவாங்கிச் - செங்கமல

வாணி அருள்வாங்கி வற்றாப் பொருள்வாங்கி

ஏணியாய் யார்க்கும் இரு!

 

கொடுப்பதிலுன் கைகளே கோலோச்சும், தீந்தமிழ்ப்பாத்

தொடுப்பதிலென் நாப்போல்நாள் தோறும்; - நெடுநாள்

புவியரசைக் காணப் புகுந்தேன்;இவ் ஏழைக்

கவியரசை ஏறெடுத்துக் காண்!

 

வாழ்வித்தான் கம்பனை வள்ளல் சடையப்பன்

சூழ்ந்துசுதன் காவியம் சொன்னதற்காய்; – ஆழ்ந்த

புலமை அமுதனைப் போற்றிவாழ் விப்பாய்...

நிலத்திலுன் பேர்நிற்கும் நீடு!

 

முத்தமிழால் மெட்டை முழம்போட்டு நானளந்தால்

புத்தமிழாள் ஆகிப் பொலியாளா? – த‍த்தைகள்சூழ்

வித்தகா! பாடல் விளம்புகிறேன்; நின்படத்தில்

த‍த்தகா ரம்வாங்கித் தா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக