எனக்குள்
அவள்!
ஓர் அனாதைச் சிறுவனின் அவலப் புலம்பல்கள்
எங்குசென்றாள்? என்தாய் எங்குசென்றாள்? என்னை
இங்குள்ள தொட்டியிட்டு எங்கேதான்
சென்றாள்?
பொன்தட்டில் நெய்சோறும் பருகப் பழச்சாறும்
விண்கட்டில் மீதேறி விளையாட வெண்ணிலவும்
பட்டோடு துணிவகையும்@ பலநிறத்தில் அணிமணியும்@
கேட்டேனோ? அழுதேனோ? கத்திழுயிர் எடுத்தேனோ?
தப்பாய்ப் பிறந்தேனோ? தவறேதும் செய்தேனோ?
அப்பன் யாரென்று அடம்பிடித்து அழுதேனோ?
குப்பைத் தொட்டியென் தொட்டில் ஆனதே...
இப்போது அன்னைமடி கனவாகிப் போனதே...
ஆவொன்று கன்றுக்கு அமுதூட்டி
விளையாட
‘கோ’வென்று மனமழுவும் கண்ணீரும் சேர்ந்தழுவும்!
கிளியொன்று குஞ்சுக்கு தின்பண்டம் ஊட்டுகையில்
விழியில் நீர்பெருகும்! விசனத்தில் நெஞ்சுருகும்!
திருவோடு கையோடு@ சாண்வயிறு பசியோடு@
தெருவோடு எனைக்கண்;டால் ஊர்வாசல் அடைத்துவிடும்!
நாயீன்ற குட்டிக்கும் நாலுவீட்டில் சோறுண்டு...
ஊருலகில் எனக்கின்று உறவென்று யாருண்டு?
மார்கழி குளிருக்கவள் மாராப்பை நெனச்சபடி
எச்சில் இலையை எடுத்தேநான் போத்துகிறேன்
தென்னை மரத்தடியோ தெருவோரக் கிணற்றடியோ
தாய்மடி தானென்று தலைவைத்துத் தூங்குகிறேன்
பத்தினிப் பெண்மையவள்... பனிமலரின் மென்மையவள்...
பட்டினிக் கிடக்கையிலும் பார்க்கவரா தெய்வமவள்...
தூக்கம் விழிசேராத் தூரத்தில் தொலைகிறதே!
ஏக்கம் என்னுள்ளே எரிமலையாய்க் கனல்கிறதே!
ஓடி நானொளிய ஒளிந்தயெனை அவள்தேட…
பாடி அவளழைக்கப் பறந்துவந்து நான்சேர…
கொத்தும் கிளிபிடிக்க கோபத்தில் அதுகடிக்க…
கத்தி நானழுக கண்டுஅவள் கண்ணொழுக…
மணக்கும் பன்னீரில் மணிக்கணக்கில் நீராட்டிச்
சுணக்கம் ஏதுமின்றித் தூயவள் பார்த்திருக்க…
விளையாட நான்செல்ல… உணவூட்ட அவளழைக்க…
களிசேர்க்கும் இவையனைத்தும் கனவுகளின் ஏக்கங்கள்!
இளமைக் காலங்கள் இருந்தும் என்னுள்ளே
வளமை சேர்ப்பிக்க வருங்காலம் வருவாளோ?
இருக்கும் வேளையிலே இடைவெளி வளர்ப்பவள்
இறக்கும் பொழுதேனும் இருந்தென்னைப் புதைப்பாளோ?
ஆக்கப் பொறுத்தமனம் ஆறப் பொறுத்திருக்கும்...
தீய்க்கும் நினைவுகளோ தின்றென்னை முடித்திருக்கும்!
எனக்கொரு வரம்கிடைத்தால் மகளாக அவள்கேட்பேன்
அவளைப்போல் வீசாமல் ஆருயிராய்க் காத்திருப்பேன்
நான்ஏங்கும் பாசத்தை அவள்மீது உதிர்த்திருப்பேன்
எனக்கான அவளைக்கேட்டு எமன்வரினும் எதிர்த்திருப்பேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக