சனி, 13 ஜூன், 2026

 

மாலை நிலாப்பொழுது; மங்கை உனதருகில்;

காலை வரையில்நாம் கண்விழிப்போம்; - சேலைக்குள்

இன்பத்தேள் கொட்டும் எழிலை எனக்குரைத்(து)

இன்பத்தேன் வெண்பா எழுது!

 

நெஞ்சுப் பொதிகள்; நெலியும் இடைசுமக்கும்

பஞ்சுப் பொதிகள்; படர்ந்ததன்மேல் – கொஞ்சித்

துயிலக் கொடுத்துவைத்தோய்! தோட்டுக் கலந்தழிப்பாய்

மயிலின் மனத்து மயல்!

 

கன்னம் கடித்துக் கனியிதழ்த் தேன்குடித்துப்

பின்னம் இளநீர் பெரிதுண்க; - முன்னம்

அசலைப் பருகி அனுதினமும் ஆங்கே

பசலை வளர்ந்த படி!

 

கடைக்கண் வழியுன் கவினைப் பருகி

உடைக்கண் எனைநான் ஒளிக்க; - இடைக்கண்

அடைக்கலம் தேடியுன் ஐவிரல் தாவும்

படைக்கலம் போலும் பறந்து!

 

நோகும் எனவெண்ணி நோகாமல் சிற்றிடை

தாகம் தணிக்கத் தலைப்படா(து) - ஆகம்

நொறுக்கி எடுத்துமயல் நோய்தீர்த்து மீண்டும்

பொறுக்கித் தொடுத்துப் புதுக்கு!

 

வள்ளல்நான் வந்து வழங்கும் பொழுதும்நீ

கொள்ளல் விடுத்துக் குறிவைத்துக் – கொள்ளை

அடிக்கத் துடிக்கும் அழகை வியந்து

நடித்துச் சிவக்கும் நகில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக