புதன், 17 ஜூன், 2026

 

பல்லவி :-

 

சாமி செத்துப் போச்சா?

வானம் இத்துப் போச்சா?

அப்பாவுக் கென்னானது? – அட

என்நெஞ்சம் புண்ணானது – இது

மெய்தானா? – வெறும் பொய்தானா? – இனி

நான்என்னாவேன்? – இது மெய்தான் என்றே ஆனா(ல்)?

 

சரணம் :- 1

 

ஒம்பாச நேசம் ஒங்கோப தாபம்

எண்ணாத நாளேது? – நீ

இல்லாம நானேது?

நீசெஞ்ச தியாகம் நீபட்ட பாடு

எல்லாம்என் நெஞ்சோடு – இனி

என்னாகும் என்பாடு?

வெண்ணிலா தேயலாம் வானம் தேயுமா?

கண்கள மூடினால் காட்சி தோன்றுமா?

உனக்கேதும் ஆனா

      நான்ஆவேன் வீணா!

 

சரணம் :- 2

 

ஒந்தேகம் வாட்டும் எஞ்சோகம் கூட்டும்

நோயின்று தீராதா? – அந்த

நோய்க்கேநோய் வாராதா?

ஒந்தோளில் ஏறி ஊர்கோலம் போன

      அந்நாளும் அரும்பாதா? – அந்த

      சந்தோஷம் திரும்பாதா?

சாமியே வாடினா யாரு தஞ்சம்?

பூமியே ஆடினா ஏது மிஞ்சும்?

துடுப்பில்லா ஓடம்

கரையெங்கே சேரும்?

 

சரணம் :- 3

 

கம்பீர மாக நான்பார்த்த அப்பா

கம்பூன்றும் வயசாச்சா? – அந்த

கம்பீரம் பழசாச்சா?

ஒன்னோட ஆச நீவச்ச மீச

நரையின்று விழுந்தாச்சா? – தோலில்

சுருக்கங்கள் சூழ்ந்தாச்சா?

மன்மத தேவன மிஞ்சப் பார்க்கும்

நீவரும் தோரண யார்க்கு வாய்க்கும்?

விழுந்தாயா நோய்க்கை?

      இதுதானா வாழ்க்கை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக