அகரம் அமுதன்
அங்க மழையா?
அனல்காத்து வீசுதா?
இங்க மழையா
இருக்குது; – மங்கிய
வானம் பொசபொசக்க,
வையம் நசநசக்க,
ஊனதுவும் ஜில்லிட்ட(து)
உள்!
வரதன்
எங்குமே செல்ல
இயலாத வாறுதான்
இங்கும் மழையாய்
இருக்கிறது -- இங்கேயே
சூடான தேனீர்
சுவைத்தபடி உள்ளேன்நான்
ஆடாது அசையாது
அடைந்து.
அகரம் அமுதன்
தேகக் குளிருக்குத்
தேத்தண்ணீ நான்குடிச்சும்
ஆகத்(து) உதறல்
அடங்கலே; – வேகமா
போர்வைக்குள் போயொளிஞ்சும்
போகலே; இக்குளிரை
யார்பெத்துப் போட்டாங்க
இங்கு!?
வரதன்
எல்லா குளிரும்
இதமா
அடங்கணும்ன்னா
சுள்ளுன்னு மெக்டௌல்
சுவைச்சிடு
-- இல்லைன்னா
பெய்யும் மழையில்
பெருங்காய்சல்
வந்துடும்
பொய்யில்லே டாஸ்மாக்கு
போ.
அகரம் அமுதன்
நானொரு 'பீர்'பிரியன்;
நன்கதனை நீயறிவாய்;
தேனொத்த போதும்'ஹாட்'
தீண்டிடேன்; - ஊனொத்துக்
காதென்ப தல்ல;
கனிந்தவென் நெஞ்சொத்துக்
காதென் பதேயென்
கருத்து!
வரதன்
எட்டுசதம் தானே
இவையிரண்டில்; ஆல்கஹால்
தொட்டுதான் பாரேன்
துயர்குறையும் -- எட்டெடுத்து
ஓரடியும் வைக்காமல்
உள்ள விருப்பமென
பீரடிப்ப தெல்லாம்
பிழை.
அகரம் அமுதன்
நொங்கும் நுரையுமாய்ப்
பொங்குகிற பீர்போல
இங்கெதுவும் ஆனந்தம்
ஈந்ததில்லை; - உங்கூட
குந்தி அடிச்சதெல்லாம்
கூல்கிங் பிசர்தானே;
சிந்தை மறந்தாயா
செப்பு!
வரதன்
ஊட்டியில ரம்;வெளி
ஊர்போனா விஸ்கீன்னு
கோட்பாடும் உண்டு
குறித்துக்கொள் -- பாட்டெழுதி
சைட்டிஷ்சா வெண்பாவ
சாப்பிடேன் கொஞ்சநாள்
வெய்ட்போடும் பீர
விடு
அகரம் அமுதன்
பலப்பலவா ஐட்டத்தைப்
பார்ப்பவன் நீ நான்
நிலையாக ஒன்றிலே
நிற்போன்; – மலையையே
பேத்து வழங்கினும்
‘பெக்’கைத் தொடமாட்டேன்;
ஏத்துக்க நீயும்
இதை!
வரதன்
இந்தவெண்பா கூட
இதிலோர் வரிகுறைச்சா
சிந்தியலா மாறும்
சிறப்புபோல் -- அந்தபீர்
உள்ள குடிக்கிறப்போ
ஓர்மூடி ஹாட்சேத்து
சுள்ளுன்னு ஒருநாள்
சுவை.
அகரம் அமுதன்
ஆள விடுசாமி!
ஐடியா கேட்டதுக்கு
நீளமா பாடம்
நிகழ்த்துகிறாய்; – தாளமே
போடறேன் இற்றைப்
பொழுதைக் கழிக்கவே,
போடனுமா ரம்ஜின்னைப்
போய்!?
வரதன்
மனம்நினைத்த வாறு
மதுபோதை ஏற்ற
தினம்நினைக்க ஏலாமல்
தின்ன -- வனம்வளருங்
காய்கறியை உண்டே
கடக்கின்றேன்; என்னுடைய
வாய்க்கறியை உண்டால்போம்
வாழ்வு
அகரம் அமுதன்
சரக்கைநீ நிப்பாட்டி
சாதனை யாய்ஆண்டு
இரண்டுக்கு மேலிருக்கும்
இல்லை? – பிரண்டுக்கு,
விட்ட சரக்கின்
விலாசம் தரலாமா?
கெட்டழி என்றுமெனக்
கிட்டு!
வரதன்
ஒண்ணுமில்ல உந்தன்
உடம்புக்கு; அதனால
தண்ணி அடிக்கலாம்
தப்பில்ல -- என்றைக்கு
நோயறிஞ் சேனோநான்
நொந்துட்டேன் அன்றுமுதல்
வாய
அடக்கிட்டேன்
வந்து.
அகரம் அமுதன்
சவுக்கியமா நானிருந்தா
தண்ணி அடிச்சிக்
கவுந்துவிழ லாமா
கவிஞா! – அவுந்ததுணி
மானம்வாங் காதா?
மரியாதை நீங்காதா?
ஏனத்தை நோக்கலநீ
இங்கு!?
வரதன்
கொட்டாம பீர
குடிச்சி;வெண் பாதளையுந்
தட்டாம பாடித்
தனிச்சிருக்க -- கட்டுந்
துணியவு றாது
துணிந்துந்தன் சிந்தை
அணியவுக்கும் மட்டும்
அறி.
அகரம் அமுதன்
கண்ணி வெடிக்கும்,வன்
கண்ணடிக்கும் தப்பலாம்;
தண்ணி அடிச்செவன்
தப்பினான்? - உண்மையில்
ஹாட்டோகூல் பீரோ
கடைசியில் சேதத்தைக்
கூட்டாமப் போவாது
கொன்று!
வரதன்
கால்தான் அளவடியாய்க்
கட்டிங்கே சிந்தியலாய்
ஆல்போல் தமிழில்
அளவைபோல் --- நாள்முழுக்க
ஒற்றைபீர் அந்தியில்
உக்காந்து நீகுடிச்சா
எற்றைக்கும் இல்லை
இடர்
அகரம் அமுதன்
வெதுவெதுப்பாய் வெண்பா,
வெகுகுளிராய் ஓர்பீர்,
அதுபோதும் நான்முடிவேன்
ஆயுள்; - இதுசரியா
என்பதெலாம் நானறியேன்;
ஏசுவார் ஏசட்டும்;
பின்நிலைக்கும் என்னெழுத்தின்
பேச்சு!!
வரதன்
சிப்புக்கோர் சீரெழுதி
சிந்தித்து சைட்டிஷ்சில்
சிப்ஸுக்கோர் வெண்பா
செலவழித்தால் -- எப்போதும்
காசும் குறையாது
கன்னித் தமிழில்உன்
ஆசும் குறையாது
அறி.
அகரம் அமுதன்
சந்தடி சாகில்
சரக்கின் மகத்துவத்தை
வந்துவெண் பாவா
வடிக்கிறாய் - குந்தி
உடனடிக்க ஆகாதே
உன்னாலே என்று
விடத்துணிந்தேன் இந்த
விஷம்!
வரதன்
பீர்குடித்தால் என்னே
பிழையாம்; குடிக்கயில்
சீர்குடிக்கும் உந்தன்
சிறப்பபின்முன்?
-- யார்குடித்தால்
நாடும் மொழியை
நமக்கேற்ற வாறமைக்கக்
கூடும் இதுபோல்நீ
கூறு.
கண்ணுக்குள் தூக்கம்
கனவாக வில்லையென
தண்ணி அடிக்கும்
தரணியில் -- பண்ணுக்குள்
தங்கும்சீர் வேண்டி
தனிமையில் நீீயருந்த
பொங்கும்பீர் தப்பில்லை
போடு.
அகரம் அமுதன்
பாட்டும்,பீர் பாட்டிலும்,
பக்கம் வரதனும்,
கூட்டும் களிப்பொரு
கோடிபெறும்; - போட்டுடைத்துப்
போய்விட்டாய்; நானோ
புழுங்கித் தவிக்கின்றேன்
தாய்விட்ட சேயாய்த்
தனித்து!
வரதன்
நானும் அடித்திருந்தால்
நன்றாய் இனும்வெண்பா
தேனும் வழிய
திரித்திருப்பேன் --- ஊனுக்குள்
நோய்த்தொற்று இருப்பதனால்
உன்றன்நே ராய்ப்பாடத்
தாய்த்தமிழில் கொஞ்சம்
தடுப்பு.
அகரம் அமுதன்
அந்தநாள் ஞாபகம்
அப்பிக் கிடக்கிறது
எந்தனகத் தங்குனக்கு
எப்படியோ? - இந்த
இடைவெளி என்னை
இரண்டாய்ப் பிளக்கும்
படைவேலைப் போலுளத்தில்
பாய்ந்து!
வரதன்
கூட்டோடு நாமும்
குளிர்ந்திருந்த நாளெல்லாம்
பாட்டோடு நெஞ்சில்
பயணிக்கும் -- ஏட்டுடன்
உன்றன் புகழுடன்
என்புகழ்வா ராவரைக்கும்
என்னே பயனாம்
இதில்
அகரம் அமுதன்
ஆற்றில் அமர்ந்தபடி
ஆகாயம் பார்த்தபடி
காற்றுமறி யாமல்
கதைத்தபடி - நேற்றுகளைத்
தின்று செறித்தோம்
திமிராய் அமர்ந்தபடி
ஒன்றும்நினை உண்டா
உனக்கு!
வரதன்
வெண்பாவ மட்டும்
வெரசா குவிச்சிவச்சிப்
பண்பாடிப் பாடிப்
பயனென்ன -- நண்பா....
கணையிழந்த வில்லும்
கவிபாடி ஓங்கும்
உனைையிழந்த நானுமிங்கே
ஒன்று.
வாந்திஎடுத் தாலும்
வளர்கவியில் அப்புக
ழேந்தியை எண்ணி
எழுதிவந்தோம் -- பூந்தியெலாம்
லட்டில் உதிர்ந்ததுபோல்
லாஸாக்கி என்னைநீ
விட்டுப்போய் விட்டாய்
விரைந்து.
அகரம் அமுதன்
ஆசான்நான்; என்னை
அவமதிக்கும் செய்கைகளைக்
கூசாமல் செய்ததுயார்
கூறப்பா? - பேசாமல்
செய்த தவறைச்
சிறிதேனும் ஒத்துக்கொள்;
பொய்களால் பூசாதே
பூச்சு!
ஆசானை விஞ்சும்
அளவிற்கே உன்னைநான்
மாஸாக பேணி
வளர்த்தெடுத்தேன்;
- பாஸான
தெம்பில் எனைமறந்து
சேர்ந்தாய் பிறரோடு
கொம்பு முளைத்ததாய்க்
கொண்டு!
நட்பாலே நாமிருவர்
நண்பர்கள்; பூந்தமிழ்ப்
பெட்பாலே நானுனக்குப்
பேராசான்; - உட்புகுந்த
பாட்டா சிரியனுக்கு
பாவரசை நண்பனென்றாய்;
ஏட்டிலும் செய்தாய்
இடக்கு?
வரதன்
எந்த நிலையிலும்
யானிகழ்ந்த தில்லையுனை
அந்தநிலை அன்றி
அசைத்ததில்லை -- உந்தனிடம்
யாரேனுஞ் சொன்னதுண்டா
இன்றுவரை; என்நிலையுன்
சீரே உரைக்கும்கேள்
சென்று.
அகரம் அமுதன்
மற்றவர் பேச்சில்
மதிமயங்கும் ஆளானான்?
குற்றமுரைத் தாயென்றா
கூறினேன்; - மற்றபடி
உன்றன் செயலில்தான்
ஒன்றிரண்டு தப்புரைத்தேன்
என்றாலும் நீயென்சிஷ்
யன்!
இரவு வணக்கம்;
இனிதாய் உறங்கு;
வரட்டும் கனவு
வரமாய்; - தரட்டும்
அமைதியை நெஞ்சில்;
அதைத்தானே வேண்டிக்
குமைகிறோம் நெஞ்சம்
கொதித்து!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக