வரதன் :-
காஞ்சிருக்கும் குச்செரிச்சி கால்அண்டா
தண்ணிவச்சி
ஓஞ்சிவந்த நீயும் ஒடம்பூத்த -- சாஞ்சிநின்னு
கூட்டும் வலியோடும் கும்மாளம் போடவைக்கும்
ஹீட்டர் இதத்தருமா கேள்?
அகரம் அமுதன் :-
கடுப்புல பேசாத; கஞ்சத் தனத்தால்
அடுப்புல வேகாத ஆமாம்; - இடுப்புல
சுத்துன வேட்டியும் சொந்தமில்ல போகயில;
கெத்தாக வாழவென்சொல் கேள்!
வரதன் :-
மூட்டு வலின்னு முனுனுத்தா எந்தாயி
கூட்டிவந்து தண்ணி கொதிக்கவச்சி ---
கேட்டென்ன
எங்கெங்க நோவுதோ எல்லாமே நீவிடுவா
அங்க கிடைக்காது அது.
அகரம் அமுதன் :-
மஸ்ஸாஜ் மெசினொன்னு வாங்கிவந்து போட்டாக்க
அஸ்உஸ்என் கின்ற அவஸ்தையில்ல; - தஸ்புஸ்னு
மேல்மூச்சு வாங்காம வேகமா ஷோரூம்போ;
மால்போனா லும்கிடைக்கு மாம்!
வரதன் :-
கட்டுனவ நீவிவிட்டா காதலுந்தான்
சேந்துவரும்
தட்டுமுட்டு சாமான் தராதேப்பா -- தொட்டு
சிலாகிச்சி மோக சிகிச்சையெல்லாம் அந்தப்
பிளாஸ்டிக் குடுக்குமா பேசு?
அகரம் அமுதன் :-
கெட்ட பயலுக்குக் கேனச்சி பெண்டானால்
தொட்டமுக்கக் கூடும் தொடைவரைக்கும் -
நட்டமா
நிக்கவச்சி பெண்டை நிமிர்த்திடுவா
இன்றையபெண்;
தக்கனவாங் கித்தந்து தாங்கு!
வரதன் :-
சொன்னதெல்லாம் தந்தா சொகத்த தருவேன்னா
என்னையா பொண்ணா இவளெல்லாம்? -- அன்பால
ஒல குடிசையும் ஒத்த மனசிருந்தா
சோல குடிசைன்னு சொல்.
அகரம் அமுதன் :-
பஞ்சம்பா ராட்டினின்னா பாவைபால் காரனுக்கு
அஞ்சும்,காய்க் காரனுக்கு அம்பதும் - கொஞ்சி
மளிகைக் கடைக்கார மாமனுக்கு நூறும்
அளிக்கோணும் முத்தம் அளந்து!
வரதன்:-
காய்கறியே இல்லைன்னா கஞ்சி பசியாத்தும்
வாய்ருசியா சந்தோஷம் வாழ்கையில? ---- தாய்போல்
எதுன்னாலுங் கூட இருப்பா; அமுதா
இதுதான்யா காதல் எழில்!
அகரம் அமுதன்:-
காதல்ன்ற; கால்வயித்துக் கஞ்சின்ற; மண்குடிசை
போதும்ன்ற; ஏற்பவளே பொண்ணுன்ற; - ஏதுநீ
பேசறிஞ்சிப் பேசறியா? பேசணுன்னு பேசறியா?
காசறிஞ்சிச் சேத்துவளங் காண்!
எக்கேடோ கெட்டுப்போ; எப்படியோ
செத்துப்போ;
செக்குமாடு ஊர்வந்து சேராது; - சிக்கனம்
என்பது வேறுகஞ் சத்தனம் வேறென்றால்
உன்பதில் வேறாகும் ஓடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக